இந்தியா

`அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்' – மாணவர்கள் தற்கொலை விவகாரத்தில் நீதிபதி கிருபாகரன் காட்டம்!

நீட் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களின் தற்கொலை சம்பவங்களைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் இடம் கோருவது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருத்திகா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன்  “நீட் தேர்வு தோல்வியால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வுக்கு முன்பாக உரியப் பயிற்சிகள் அளிக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார். இந்நிலையில்  உயர்நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவினை தமிழக அரசு இதுவரை நிறைவேற்றாததால்தான் இந்த ஆண்டும் மாணவிகள் இரண்டு பேர் தற்கொலை செய்துள்ளனர். எனவே தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்க  வேண்டுமெனக் கூறி வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது  “ மாணவர்களின் தற்கொலை சம்பவங்களைப் பயன்படுத்தி கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள். தேர்வுகள் குறித்து மாணவர்களுக்கு முன் கூட்டியே அறிவுரை வழங்காமல் இறந்த பிறகு கண்ணீர் வடிப்பது தேவையற்றது. மாணவர்கள் தற்கொலை சம்பவங்களுக்கு அரசை மட்டும் குறை சொல்லக் கூடாது. இது சமூகத்துக்கு நல்லதல்ல. இதைத் தடுக்க  வேண்டியது  சமுதாயத்தில் உள்ள அனைவரது பொறுப்பு தான் எனக் கருத்து தெரிவித்ததுடன் மாணவர்கள் தற்கொலைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 2 வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனச் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். 

முன்னதாக, வழக்கின் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அதில், “மாணவர்களுக்கு நீட் தேர்வு சம்பந்தமாகப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தேர்வுகளை மாணவர்கள் எளிதாக அணுகும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. எனினும் எதிர்பாராத விதமாகத் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுகிறது. இதற்கு அரசு தான் காரணம் என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது” என வாதிடப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி