கலாச்சாரம்

அரிய கருத்துகளுடன் இனிதே நடந்த தைவான் தமிழ்ச்சங்கத்தின் 4-ம் தமிழ் இலக்கிய அமர்வு


தைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் தொடர்ச்சியாக நடத்தப்படும் தமிழ் இலக்கிய அமர்வின் நான்காம் அமர்வு தைபே (Taipei) நகரில்உள்ள தேசிய தைவான் பல்கலைக்கழகத்தில் (National Taiwan University) சிறப்பாக நடைபெற்றது. முனைவர் மு. திருமாவளவன் அவர்கள்சீரிய தலைமையில் திரு. உதயண்ணன் அவர்கள் அவை முன்னவராக இருந்து வழிநடத்தினார். இந்த அமர்வினை சிறப்பிக்கும் விதமாகதமிழ்க்கடல் திரு.நெல்லை கண்ணன் அவர்கள் காணொளி வழியாக சிறப்புரையாற்றினார். பங்கேற்ற பார்வையாளர்கள் அனைவரும்ஐயாவின் உரையில் இன்புற்று மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்தனர்.

நெல்லை கண்ணன் அவர்கள் தைவான் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரோடும் உரையாற்றுவதில் பெரும்மகிழ்ச்சி அடைவதாக கூறி தனது உரையை தொடங்கினார். தமிழகம் கடந்து வாழும் உங்களை போன்ற தமிழ் மக்கள் தமிழின் மீதுகாதலுடன் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒவ்வொருவரும் அவரவர் காலத்திலே தமிழை பலமடங்கு பாராட்டி உள்ளனர். அந்தமொழி அழிந்து போகும் என்று உலகத்திலே பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர் ஆனால் என்னுடைய நம்பிக்கை ஒரு காலத்திலும் தமிழ்மொழி அழிந்து போகாது. உங்களை போன்றவர்கள் கடல் கடந்து போனாலும் தமிழ் மீது வைத்துள்ள பற்றுதான் அதனை காப்பாற்றிக்கொண்டிருக்கிறது.

இன்னொன்று அழியக்கூடாத அற்புதமான நூல்களை கொண்டது தமிழ். ஒரேயொரு நூல் மட்டுமே போதும், அதுதிருக்குறள். இன்றைய சூழ்நிலையில் வாழ்க்கையில் எந்த காலத்திற்கும் ஒரு மனிதனின் எந்த ஒரு செயலுக்கும் ஏற்ற வினாவையும்அதற்கேற்ற விடையையும் வள்ளுவன் நமக்கு கொடுத்துள்ளான்.

Taiwan Tamil Sangam Literature Conference

இன்றைக்கு எத்தனை பெரிய தொழில்கள் இருந்தாலும் உழவுதான்அனைத்திற்கும் மூலத் தொழில் என வள்ளுவன் சொல்கிறான். ‘சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால் உழந்து உழவே ”குறளின் மூலம் ஒருஅருமையான செய்தியை சொல்கிறான் வள்ளுவன். எந்த தொழில் செய்பவனுக்கும் உழவன் உணவளிக்கவில்லை எனில் வாழ்க்கைகிடையாது. எல்லா உயிர்களையும் காப்பாற்றும் இடத்திலே உழவன் இருந்தாலும் அவன் அத்தொழிலில் நலிவடைந்துதான் உள்ளான்.அவ்வாறு இருந்தாலும் அவன் அத்தொழிலை செய்ய காரணம் எல்லா உயிர்களையும் காப்பாற்றவே கடவுள் தன்னை படைத்துள்ளான் எனபெருமை கொள்வான். மெத்த படித்தவன்தான் அறிஞன் எனப்படுவது இல்லை, எவன் ஒருவன் பிறர் துன்பத்தை தன் துன்பமாக எண்ணிவருந்துகிறானோ அவனே அறிஞன் எனப்படுவான், எனவே உழவனும் ஒரு அறிஞன்தான். வாழ்வில் சிறந்து விளங்க வேண்டுமெனில் மற்றஎந்த நூல்களை படிக்கவில்லை என்றாலும் திருக்குறளை படியுங்கள், நீங்கள் சிறந்து விளங்குவீர்கள் என எடுத்துரைத்தார். இருபதாம்நூற்றாண்டின் இணையற்ற கவிஞன் பாரதி.

அவன்தான் கற்பு என்ற மாயையை உடைத்தெறிந்தவன் ஆணெல்லாம் கற்பை விட்டு தவறுசெய்வானெனில் அவன் அங்கே ஒரு பெண்ணை கற்பழிக்கிறான் ஆணும் பெண்ணும் கலந்து வாழும்போது அவன் பெண்ணின்உணர்வுளை மதித்து வாழ்ந்தான் எனில் அது சிறந்த வாழ்க்கை. அப்படி இல்லையெனில் அது வாழ்க்கை இல்லை என்றான்.

வள்ளுவனைக்கூட தொலைத்து விடலாம் ஆனால் அவ்வை கிழவியை தொலைத்து விடக்கூடாது. ஒற்றை வரிகளில் ஆழமானகருத்துக்களை வழங்கியுள்ளாள் ”அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” பெற்றோரின் சிறப்பையும் எனக்கூறும் அவ்வை ”அறம் செய்யவிரும்பு” என மென்மையாய் உறைக்கிறாள்.

Taiwan Tamil Sangam Literature Conference

முதலில் அறம் என்பது பசியோடு இருப்பவருக்கு உணவளித்தல் மட்டுமல்ல எவன் ஒருவன்தூய்மையான மனதோடு வாழ்கிறானோ அவன் அற வழியில் வாழ்பவனே என்ற வள்ளுவனின் கூற்றிற்கிணங்க இல்லறமென்பது நல்லறம்என அவ்வை அறத்தையும் இல்வாழ்க்கையோடு இணைத்து அழகாய் கூறுகிறாள்.

மேலும் பல அவ்வையின் கருத்துக்களை எடுத்துரைத்தஅவர் இலக்கிய திறனாய்வாய் வள்ளுவன், அவ்வை, நபிகள் நாயகம் போன்றோர் கூறிய பல கருத்துக்கள் எவ்வாறு ஒன்றோடொன்றுதொடர்புடையதாய் உள்ளது என்பதை அழகாய் விளக்கினார். அரசுகளின் நேர்மை பற்றி கூறும்போது அக்கால அரசர்கள் எவ்வளவுநேர்மையாக இருந்தார்கள் என்பதை ”என்னே அரசன் யானோ கள்வன் ” என்ற வாக்கியத்தின் மூலம் அறியலாம்.

மேலும் அவர் தன்சொந்த கருத்தாக நான் கடவுளை வணங்க வேண்டாமென்று சொல்லவில்லை, ஆனால் மக்களுக்கு அரும் சேவை செய்யுங்கள் அதுவேகடவுளை அடைந்ததாக கருதப்படும். மேலும் பணம் வாழ்க்கைக்கு அவசியம்தான் ஆனால் பணம் மட்டுமே இன்றியமையாதது இல்லைஎன்றார் வள்ளுவனின் ”பொருள் இல்லார்க்கு ” என்ற குறளிற்கிணங்க. பல்வேறு நூல் வாசிப்பின் அவசியத்தையும் தமிழ் நூல்கள்மட்டுமின்றி பிற மொழி நூல்களையும் வாசித்தல் அவசியம் என்றார். அதுமட்டுமின்றி பிறமொழி இலக்கியங்களை தமிழில்மொழிபெயர்த்தால் வேண்டும் என்றார் ”பிறநாட்டு சாஸ்திரங்கள்” எனத் தொடங்கும் பாரதியின் பாவிற்கேற்ப. தனது உரையின் கருத்தாகஉறவுகளை எல்லாம் நட்பாகிக் கொள்ளுங்கள் நட்புகளை எல்லாம் உறவாக்கிக் கொள்ளுங்கள் என்றார் இறுதியாக அன்போடு வாழ்ந்தால்உயர்வாய் வாழலாம் என தனது உரையை முடித்தார் தமிழ் மற்றும் கொரிய மொழித்தொடர்ப இரண்டாவதாக “தமிழ் மற்றும் கொரிய மொழித்தொடர்பு – ஒரு நாடோடியின் பார்வையில்” எனும் தலைப்பில் முனைவர். சுப்புராஜ்திருவேங்கடம் அவர்கள் உரையாற்றினார். அவர் தன் உரையின் தொடக்கமாக,

Taiwan Tamil Sangam Literature Conference

இந்தியத் துணைக் கண்டத்தின் தென்கோடியில்பேசப்படும் தமிழ்மொழி மற்றும் அதன் பாரிய பண்பாட்டு விழுமியங்கள், ஆசியக்கண்டத்தின் கடை கீழ்திசைக்கண் பேசப்படும் கொரியமொழியோடு ஒன்றிப்போவது மிக வியப்பான செய்தியாகும் என்றார். ஆயினும் “திரைகடல் ஓடியும் திரவியந்தேடு” என்ற பைந்தமிழ்சொற்றொடரை எண்ணுகையில், தமிழன் கொரிய தீபகற்பம் வரை எட்டியிருக்கக்கூடும் என்றே தன் உள்மனம் இயம்புவதாக கூறினார்.இந்தியா தனது பொருளாதார கொள்கைகளை தாராளமயம் நோக்கி சீர்திருத்திய பின், பெரும்பாலான உலகநாடுகள் உத்திரவாதமின்றிஇந்தியாவில் முதலீடு செய்யத் தயங்கிய போது தென்கொரியா மட்டும் எவ்விதமான கோரிக்கைகளின்றி இந்தியாவில் குறிப்பாகதமிழகத்தில் முதலீடு செய்ய முன்வந்தது. இது குறித்து ஹான்யாங் பல்கலையின் மானுடவியல் பேராசிரியர் கிம்பியோங்மோ “கொரியாஇந்தியாவின்மீது குறிப்பாக தமிழகத்தின்மீது வைத்த நம்பிக்கையானது தாய்வழி உறவுகளுக்குள் உள்ள நுட்பமான தொடர்புபோன்றது”என்கிறார்.

2005ல் தென்கொரியாவிற்கான இந்தியத் தூதுவராக பணியாற்றிய திரு. என். பார்த்தசாரதி அவர்கள் “கொரியாவில்இந்திய இளவரசி” (Legend of Indian Princess in Korea) என்ற தாய்வழி தொன்மம் சார்ந்ததொரு புனைவுக் கதையை எழுதினார்.தென்கொரியாவின் தேசிய தொலைக்காட்சியான எம்.பி.சி (MBC) இதுகுறித்து “கிம்சுரோ” (Kim Suro) என்ற பிரபலமான தொலைக்காட்சித்தொடர்மூலம் விரிவாக கூறியது. மேலும் முந்தைய கொரிய-இந்திய தொடர்புகள் இலைமறைகாய் போல உள்ளதால், அவற்றைதெளிவாகக் கண்டறிய பல்துறை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என திரு. என். பார்த்தசாரதி அறிவுறுத்துவதாக பேசினார்.மேலும் கொரிய நாட்டார் பழங்கதை, மற்றும் அவர்களது வரலாறு குறித்த நிகழ்வுகளை இல்யோன் என்கிற பவுத்த துறவி 13ஆம்நூற்றாண்டில் “சம்குக்உசா” (SamkukYusa) என்ற நூலில் ஆவணப்படுத்துகிறார். இந்நூலின்படி கொரியா தமிழகம் போல மூன்றுநாடுகளாகவும் (சில்லா, பெக்ஜே, கயா) மற்றும் ஐந்திணைகளாகவும் வகைப்படுத்தப்பட்டமை கொரிய-தமிழ்தொடர்புக்கு சான்றுபகர்வதாகும்.

மேலும் கொரிய நாட்டவரின் கர்ண பரம்பரைக் கதைகள் பல தமிழ்புராண தொன்மங்களின் சாயலில் இருப்பது மிகவும்அதியசத்தக்கதாகும். பட்டுப்பாதை என்றவுடன் ஆய்வாளர்கள் பலருக்கும் முதலில் நினைவுவரும் சீனம் தொடங்கி நிலவழியாக மத்தியஆசிய நாடுகளை ஊடறுத்துச் சென்று ஐரோப்பிய நாடுகளை அடையும் பாதைதான். ஆனால் மத்திய தரைக்கடல் தொடங்கி எகிப்துவழியாக அரபிக்கடல், இந்திய பெருங்கடல், மற்றும் வங்கக்கடல் வழியாக காடாரம் (மலேசியாவின் மேற்கு கடற்கரை பகுதி), சாவகம்(இந்தோனேசியாவின் மாகாணங்களில் ஒன்று) முதலான தென்கிழக்காசிய நாடுகள்வழியே நடந்த பட்டுப் பாதை வணிகம் குறித்தும்அதில் தென்னிந்தியா ஒரு இணைப்புக் கேந்திரமாக விளங்கியது குறித்தும் பலருக்கும் தெளிவாக தெரிவதில்லை.

கிம்சுரோ மன்னன் கடல்வழி வந்த இளவரசியை மணந்த கதையானது நள-தமயந்தி கதையை ஒத்திருக்கிறது. மேலும் அக்கடல் வழி வந்த இளவரசி தனது நாடு”அயுத்த” என்றும் தன்னுடன் கடல் அமைதிப்படுத்தும் அதிசயக் கற்களை கொண்ட மீன் கொடியேந்திய கலத்தில் பயணித்ததாககூறுகிறாள். வடக்கிந்திய மன்னர்கள் கடற்பயணம் செய்ததாகவோ அல்லது அதுசார்ந்த துறைகளை ஊக்குவித்ததாகவோ பெரிதானகுறிப்புகள் இல்லை என்பதால் அந்த இளவரசி நிச்சயமாக தென்னிந்தியாவை சார்ந்தவளாக குறிப்பாக பாண்டிய நாட்டை (ஆய்வேளிர்) (மீன்சின்னம்) சார்ந்தவளாக இருக்கவேண்டும். சங்க இலக்கியமான சிலப்பதிகாரத்தில் கடல் வணிகத்தில் சிறந்த விளங்கிய மாசாத்துவன்மற்றும் மாநாய்க்கன் பற்றிய குறிப்புகள் உள்ளன. மேலும் மணிமேகலையில் நாகை தொடங்கி மாநக்கவரம் வழியாக காடாரம், சாவகம்போன்ற தீவுகளுக்கு மணிமேகலை பயணித்த நிகழ்வுகள் விரிவாக கூறப்பட்டுள்ளன.

இன்றும் தென்கிழக்காசிய நாடுகளின் மொழி,பண்பாட்டு விழுமியங்களில் தமிழின் சாயல் பிண்ணிப் பிணைந்துள்ளது. போதிதருமர் இதற்கு மிக முக்கியமான எடுத்துக்காட்டாகஉள்ளார். கொரிய மொழியின் இலக்கண வரிசையானது தமிழ்மொழி போல் ஒத்துள்ளது. தமிழின் நெடுங்கணக்கு வரிசைமுறைபோன்றதொரு அமைப்பை கொரிய மொழி பின்பற்றி வருகிறது. அவர் தன் பேச்சின் இறுதியாக எளிதில் தமிழில் பொருள்படவல்லபலவார்த்தைகள் கொரியமொழியில் பயன்பாட்டில் உள்ளதாகவும். குறிப்பாக பெற்றோரை அம்மா, அப்பாவென்று அழைக்கும் முறைஇருமொழியிலும் ஒரேமாதிரி இருப்பது மொழித்தொடர்புக்கு தக்க சான்று பகர்வதாக கூறினார். மூத்தோர் வழிபாடு, களத்தில்வீழ்ந்தவருக்கு நினைவுச் சின்னம் (நடுகல்) எழுப்பிவழிபாடு, படையல் இடுதல், அறுவடை திருநாள் போன்றநிகழ்வுகள் தமிழகம்போலகொரியாவிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவதாக தனது உரையினை முடித்தார்.

பெரியாரின் பெண் விடுதலை சிந்தனைகள்

மூன்றாவதாக ”பெரியாரின் பெண் விடுதலை சிந்தனைகள்” என்ற தலைப்பில் தேசிய சிங்ஹுவா பல்கலைக்கழத்தின் முனைவர்பட்ட மாணவி செல்வி பவித்ரா ஸ்ரீராம் பேசினார். அவர் தன் உரையின் தொடக்கமாக பேசிய பெரியாரின் அறிமுகம் சற்று புதுவிதமானதொனியில் இருந்தது. அது தமிழ்நாடு சான்றோர் பலரை நம் நாட்டிற்காக கொடுத்தாலும் அதில், நாட்டிற்காக வீழ்ந்தவர் பலர்; மொழிக்காகவாழ்ந்தவர் பலர்; ஆனால் மண்டிக்கிடந்த மூட நம்பிக்கைகளை வேறறுத்தவர்கள் சிலரே, அவர்களுள் ஒருவர்தாம் பெரியார். பழந்தமிழ்சமுதாயத்தில் மதிக்கப்பட்ட பெண்கள் பிற்காலத்தில் அடிமைப்படுத்தப்பட்டனர். நாட்டின் விடுதலைக்காக போராடிய பெரியார்பெண்ணின் விடுதலைக்காகவும் போராடியது நாம் அறிந்ததே. மேலும் அவர் பெரியாரின் பெண் விடுதலைக்கான சிந்தனைகள்பலவற்றை எடுத்துரைத்தார்.

Taiwan Tamil Sangam Literature Conference

அவைகள், பெண்களுக்கான அடிப்படை உரிமை, பெண்கல்வி, சொத்துரிமை, அரசுப்பணி, குழந்தைதிருமணம் மற்றும் வரதட்சணை தடுப்பு, விதவை திருமணம், கர்ப்பம், குழந்தை பிறப்பு மற்றும் குடும்ப திட்டமிடல், புராணங்கள் மற்றும்மத இலக்கியங்கள் ஆகியவற்றால் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்தல், மகளிர் வாழ்க்கை பாணியில் தேவையானமாற்றம் மற்றும் பெண்களின் மேம்பாட்டிற்கு தேவையான பிறமுக்கிய நடவடிக்கைகள் ஆகியவையாகும். பெரியார் தனது ஆரம்பஅரசியல் வாழ்க்கையிலிருந்து பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு சமூக அதிகாரம் அளித்தல் ஆகியவற்றில் அதிக ஆர்வத்தைவெளிப்படுத்தினர். இதற்காக பெரியார் எண்ணற்ற பொதுக்கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை நடத்தி, பல்வேறு தீர்மானங்களைநிறைவேற்றி வெற்றியும் கண்டார். பெண்கள் கல்வியால் மட்டும் பெண்களுக்கு சமமான வாய்ப்புகளை உருவாக்க முடியும் என பெரியார்நம்பினார். பெண்கள் தாங்களாகவே அடிமைத்தனத்திலிருந்து வெளியேவந்து தங்களது உரிமைக்கு போராடவேண்டும் என்றுவேண்டுகோள் வைத்தார். 1920 மற்றும் 1930களில் பெண்களுக்கான பிரச்சனைகளில் எவரும் ஆர்வம் செலுத்தாத போது அவர்களுக்காககுரல் கொடுத்தவர் பெரியார்.

தனது அயராத உழைப்பு மற்றும் தொடர்ச்சியான சேவைகளின் விளைவாக பெண்களுக்கான பலஅதிகாரங்களை பெற்றுதந்தார் பெரியார். இதனால் தமிழ் சமுதாயத்தின் பெண்கள் விழிப்புடன் தங்களது உரிமைகளை பெற்றுபலதுறைகளில் சாதனைபுரிந்து வருகின்றனர். அவர் தன் பேச்சின் இறுதியாக பெரியார்வழி காட்டுகளால் மற்ற மாநிலங்களுக்கிடையேதமிழகம் இன்றுதலை நிமிர்ந்து நிற்பதாக கூறி தனது உரையினை முடித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் – பதிவு இலவசம்!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி