கலாச்சாரம்

கலிங்கம் காண்போம் – பகுதி 12: ஓர் இனிய பயணத்தொடர்


– கவிஞர் மகுடேசுவரன்

ஸ்ரீகாகுளத்தின் நகர்மையத்தில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற கோவில் அரசவல்லி சூரியனார் கோவில். பொதுவாக, ஆந்திரத்தின் புகழ்பெற்ற கோவில்களையொட்டி கடைகளின் நெருக்கம் அளவாகத்தான் இருக்கும். தமிழ்நாட்டில் உள்ளதைப்போல் கோவிலைச் சுற்றியே கடைபோட்டுப் பாதையடைக்க மாட்டார்கள். ஆனால், ஸ்ரீகாகுளத்து அரசவல்லி சூரியனார் கோவில் நடுச்சந்தை மையத்தில் உள்ளதைப்போல் நகரின் நடுவில் அமைந்துவிட்டது. கோவிலை அண்டுவதற்கே முடியாதபடி குறுகலான தெருதான். அருகிலுள்ள மாவட்டத்தினர் பலரும் அக்கோவிலுக்குத் தொடர்ந்து வந்து வழிபடுகின்றார்கள். அதனால் கோவிலுக்கு முன்பாக நல்ல தொலைவில் தானிழுனிகளை நிறுத்தச் சொல்கிறார்கள். இருமருங்கும் சிறுவணிகர்கள் குழுமிய அக்கோவில் தெருவில் ஒவ்வொருவரும் நீட்டும் வழிபாட்டுப் பொருள்களை மறுத்தவாறே செல்ல வேண்டும்.

நன்கு வெள்ளையடிக்கப்பட்ட எளிமையான முன்கட்டுமானமுடைய கோவில் அது. முதல் தோற்றத்தில் நாம் ஒரு பெருங்கோவிலின் முன்னம் நிற்கிறோம் என்றே தெரியாது. ஏதோ ஒரு வழிபாட்டுக் கொட்டகையின் முன்னிற்பதைப் போன்றே உணர்வோம். கோவிலுக்குள் நுழைவதற்கு வரிசைத்தட்டி கட்டியிருக்கிறார்கள். மடிந்து மடிந்து சென்றால் உள்ளே செல்லலாம். நாம் சென்றபோது நல்ல நண்பகல் நேரம். கோவிலுக்குள் பெரிதாகக் கூட்டமில்லை. கருவறையைப் பார்த்துவிட்டு கோவிலைச் சுற்றினோம்.

Exploring Odhisha, travel series - 12

கோவில் சுவர்களுக்கு வெள்ளைச் சுண்ணம் அடித்திருந்தார்கள். ஆந்திரத்தில் கோவிலுக்கும் கோபுரத்திற்கும் வெள்ளை அடிப்பதை ஒரு வழக்காக வைத்திருக்கிறார்கள். கோபுரத்திற்கு வெள்ளை அடிப்பதால் எங்கிருந்து பார்த்தாலும் பளிச்சென்று தெரியும். முற்காலத்தில் கோவில் கோபுரத்திற்கு வெள்ளை அடிப்பது, இரவில் அரையிருளில்கூட மக்களுக்குப் பயன்பட்டிருக்க வேண்டும். எல்லா ஊர்களிலும் கோவில்கள் இருக்கும். எல்லா ஊர்களையொட்டியும் அடர்ந்த காடுகள் கட்டாயம் இருக்கும். அக்காட்டுவழியேதான் ஊரில் வாழும் ஆடவர்கள் வினை முடித்துத் திரும்பவேண்டும். அவ்வமயம் கோவில் வெள்ளைக் கோபுர மாடங்களில் விளக்கு எரிந்தால் அவ்வெளிச்சத்தில் அந்தக் கோபுரம் எங்கிருந்து பார்த்தாலும் நன்கு தெரியும். கோவிலின் வெளியே ஏற்றப்பட்ட தீப்பந்த ஒளியிலும் வெள்ளைக் கோபுரங்கள் பளிச்சிடும். இது காட்டு வழியே அரைகுறைக் கணிப்பில் நடந்து வருவோர்க்குக் கலங்கரை விளக்கம்போல் பயன்பட்டிருக்க வேண்டும். ஆந்திரத்தைப் போன்ற பரந்த சமவெளி நிலப்பகுதியில் வெள்ளைக் கோபுரங்களுக்கு ஒரு பயன்பாடு இருந்திருக்கும்தான்.

Exploring Odhisha, travel series - 12

அரசவல்லி சூரியனார் கோவிலின் கோபுரமானது கலிங்கத்துப் பாணியில் அமைந்தது. ஏழாம் நூற்றாண்டில் கலிங்கத்தை ஆண்ட அரசர் தேவேந்திர வர்மர்தான் இக்கோவிலைக் கட்டினார். சூரியனுக்கென்று தனிக்கோவில்கள் கட்டப்பட்டதும் சூரியனைப் படைப்புக் கடவுளாய் எண்ணி வழிபட்டதும் அங்கே நிலவிய தனித்த சமயச் சிந்தனைப்போக்கு என்றே பலரும் கருதுகிறார்கள். கோவிலைவிட்டு வெளியேறியபோது வெய்யில் சுட்டெரித்தது.

Exploring Odhisha, travel series - 12

ஸ்ரீகாகுளத்தில் அருகருகே எண்ணற்ற வரலாற்றுத் தளங்கள் இருக்கின்றன. ஸ்ரீகாகுளத்திலிருந்து பன்னிரண்டு கிலோமீட்டர்கள் தொலைவில் வம்சதாரை ஆற்றின் கரையில் அமைந்துள்ள சாலிகுண்டத்தில் இரண்டாம் நூற்றாண்டைச்சேர்ந்த புத்தத் தூபிகள் இருக்கின்றன. அவை ஆற்றங்கரையையொட்டிய காட்டுப் பகுதியில் இருந்ததால் நெடுங்காலம் ஆளண்டாமல் சிதைந்து கிடந்தன. இரண்டாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை செயல்பாட்டில் இருந்த பௌத்த வரலாற்றுத் தொன்மைமிக்க அவ்விடம் 1919ஆம் ஆண்டில்தான் கண்டறியப்பட்டதாம்.

Exploring Odhisha, travel series - 12

ஸ்ரீமுகலிங்கம் என்னும் சிவன் கோவிலும் அருகேதான் உள்ளது. எட்டாம் நூற்றாண்டில் கலிங்கத்து முறையில் கட்டப்பட்ட அக்கோவிலும் தொன்மையானதுதன். ஸ்ரீகாகுளத்திலிருந்து பதின்மூன்று கிலோமீட்டர்கள் கிழக்காகச் சென்றால் ஸ்ரீகூர்மம் என்னும் சிற்றூர் வருகிறது. மகாவிஷ்ணுவின் கூர்மாவதாரத்திற்காக எழுப்பப்பட்ட பெரிய கோவிலொன்று அங்கிருக்கிறது. இராமானுஜர் தலைமையில் அக்கோவில் கிபி 1281ஆம் ஆண்டு புத்தாக்கம் பெற்றது.

Exploring Odhisha, travel series - 12

ஸ்ரீகாகுளத்தில் மட்டும் ஒரு வாரத்திற்குக் காண்பதற்குரிய இடங்கள் இருக்கின்றன. ஆனால், நம் பயணத்தில் அவ்வூர்க்கு ஒரு நாள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தமையால் அதற்கும்மேல் எங்கும் செல்ல முடியவில்லை. தனித்தனியான ஐந்து இடங்களில் மிகச்சிறப்பான அமைதியான கடற்கரைகள் – பருவா, பவனப்பாடு, கலிங்கப்பட்டினம், மொகடலப்பாடு, கல்லேபள்ளி ஆகிய இடங்களில் அக்கடற்கரைகள் இருக்கின்றன. அவற்றை இன்னொரு வாய்ப்பில் பார்த்துக்கொள்ளலாம் என்று ஸ்ரீகாகுளம்ரோடு இருப்பூர்தி நிலையம் வந்தடைந்தோம். அடுத்ததாய்ச் செல்ல வேண்டிய இடம் பூரி.

– தொடரும்

Exploring Odhisha, travel series - 12

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் – பதிவு இலவசம்!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி