கலாச்சாரம்

கலிங்கம் காண்போம் – பகுதி 18: பரவசமூட்டும் பயணத்தொடர்


கவிஞர் மகுடேசுவரன்

பூரிக்கோவில் தோன்றியதற்கு வழங்கப்படும் கதை மிகவும் களிநயமானது. முற்காலத்தில் இந்திரதையுமன் என்ற மன்னன் கலிங்கத்துப் பகுதியை ஆட்சி செய்தான். அம்மன்னனின் கனவில் தோன்றிய இறைவன் கடலில் மிதந்து வரும் ஒரு பொருளை எடுத்து எனக்குத் திருவுருச்செய்க என்று அருளினான். அதன்படி கடற்கரையெங்கும் மன்னனின் காவலர்கள் மிதபொருளைத் தேடி நின்றனர். அவ்வாறு நிற்கையில் மிகப்பெரிய மரக்கட்டை ஒன்று மிதந்து வந்து கரையொதுங்கியதைக் கண்டனர். அப்பெருங்கட்டையை எடுத்துச் சென்று மன்னன் முன் வைத்தனர்.

தாம் இறையின் திருவுரு வடிக்க வேண்டிய பொருள் இஃதே என்ற முடிவுக்கு வந்தவன் நாட்டின் கைவண்ணப் பெற்றி மிக்க மூத்த சிற்பி ஒருவரை அழைத்து வந்தான். தாம் இருபத்தொரு நாள்களுக்கு இப்பணியில் கண் துஞ்சாது ஈடுபடவிடுப்பதாகவும் தம்மை ஒரு கூடத்தில் விட்டுப் பூட்டிவிட வேண்டும் என்றும் கெடு முடிந்து தாழ் திறந்தால் இறையுரு வடித்து முடித்திருப்பேன் என்றும் கூறினார் அச்சிற்பி. மன்னனும் அவர் கேட்டுக்கொண்டபடியே செய்தான். முதற் பதினைந்து நாள்கள் கூடத்திலிருந்து உளியொளி எழும்பியவாறே இருந்தது. மன்னனுக்கு இறைப்பணி நடந்துகொண்டிருப்பதால் அளவற்ற மகிழ்ச்சி. அதன் பிறகு சின்னாள்களாகவே கூடத்திலிருந்து உளியோசை கேட்கவில்லை.

வேலையைச் செய்யாமல் சிற்பி உறங்கிவிட்டாரோ என்று ஐயுற்ற மன்னன் கெடுநாள் முடிவதற்கு முன்பாகவே கூடத்தின் கதவைத் திறந்துவிட்டான். அங்கே அரைகுறையாய்ச் செதுக்கிய நிலையில் இறையுருக்கள் இருந்தன. அரசனின் பொறுமையற்ற செயலைக் கண்டு சினந்த சிற்பி இத்திருவுருக்களையே நிறுத்தி வழிபடுக, உலகோர்க்குப் பொறுமை வேண்டும் என்ற பாடத்தை இக்குறையுருக்களை வணங்குவோர் பெறட்டும் என்று கூறி மறைந்ததாராம். பூரிக்கோவிலில் உள்ள கருவறையின் இறைச்சிலைகள் பிற கோவில்களில் இருப்பதைப்போன்று கல்வடிப்புகள் அல்ல. மரத்தினால் செய்யப்பட்டவை.

Exploring Odhisha, travel series - 18

பழங்காலந்தொட்டு இவ்விடத்திலிருந்த கோவிலை மக்கள் வணங்கி வந்துள்ளார்கள் என்றாலும் இன்றுள்ள கோவில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கிபி. 1335ஆம் ஆண்டு வாக்கில் இத்திருப்பணியைத் தொடங்கிய மன்னன் கிழங்கு கங்க மரபைச் சேர்ந்த சோடகங்கன். சோழப் பெருவேந்தரான இராசேந்திர சோழரின் மகள் வயிற்றுப் பெயரன் என்று இம்மன்னன் அறியப்படுகிறான். பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் அனங்கபீம தேவரின் ஆட்சியில்தான் கோவில் திருப்பணி நிறைவுற்றது.

Exploring Odhisha, travel series - 18

கோவிலுக்குச் செல்வதற்காக நாம் வந்திறங்கிய இடம் பூரிக்கோவிலின் தேர்வீதி. நாட்டின் மிகப்பெரிய தேர்த்திருவிழா நடக்கின்ற வீதியில் நின்றுகொண்டிருக்கிறோம் என்கின்ற உணர்வே சிலிர்ப்பூட்டியது. ஆண்டுதோறும் ஆனி மாதம் வளர்பிறையின் இரண்டாம் நாள் தொடங்கி இருபத்தொரு நாள்களுக்கு நடைபெறும் பூரித் தேரோட்டத்தைக் காண நாடெங்குமிருந்து பத்து இலட்சங்களுக்கும் மேற்பட்ட மக்கள் வருகின்றார்கள். இன்று இளவெய்யில் உடல்பட, கடற்காற்று தழுவ நான் நிற்கும் இவ்விடத்தில் தேர்த்திருவிழாவன்று எள்விழ இடமிருக்குமா என்பது ஐயந்தான்.

Exploring Odhisha, travel series - 18

கோவில் வீதி என்பது தனியழகோடு விளங்குவது. சிறிய கோவிலானாலும் சரி, பெருங்கோவிலானாலும் சரி… கோவிற் கடைவீதிகளில் உள்ள தொங்குபொருள்கள், அணிமணிகள் நம்மை வாவா என்று அழைக்கும். இருபுறமும் கோவில் நினைவாய் நாம் வாங்கிச் செல்ல வேண்டிய படப்பொருட் கடைகள் நிறையவே இருந்தன. குழந்தைகளும் பெண்களும் அக்கடைகளில் குழுமி நின்றனர். சாலையிலேயே வண்டிக்கடைகளில் காலையுணவு விற்கிறார்கள். தனிக்கடைகளில் சென்று உண்பதைவிட வண்டிக் கடைகளில் உண்பதே இடம் பொருள் சார்ந்த முடிவு.

Exploring Odhisha, travel series - 18

பூரி நகரத்தின் காவல் நிலையம் முதற்கொண்டு பல்வேறு அரசுப் பணியகங்களும் வங்கிக் கட்டடங்களும் அதே வீதியில்தான் இருந்தன. அந்தத் தேர்வீதியின் அகலம் எப்படியும் இருநூற்றடிக்குக் குறைந்திராது என்றே நினைக்கிறேன். அந்த அகலத்தில் குறையாமல் மூன்று கிலோமீட்டர்களுக்கு நீள்கிறது. வடகிழக்குத் திக்கில் குண்டிச்சா தேவிக் கோவிலருகே சென்று முடிகிறது. அவ்வீதியிலேயே பேருந்து நிலையத்தையும் நடத்திக்கொள்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

– தொடரும்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் – பதிவு இலவசம்!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி