கலாச்சாரம்

கலிங்கம் காண்போம் – பகுதி 50 – பரவசமூட்டும் பயணத்தொடர்


– கவிஞர் மகுடேசுவரன்

உதயகிரி கந்தகிரிக் குகைகள் புவனேசுவரத்தின் எல்லைக்குள்ளாகவே இருக்கின்றன என்று கருதலாம். புவனேசுவரத்தின் புறநகர்ப் பகுதிகளுக்கு வந்தவுடனேயே உதயகிரிக் குகைகள் வந்துவிட்டன. முன்பு அந்தப் பகுதியானது ஓரளவுக்கு மலையுயர்ச்சியோடு இருந்திருக்க வேண்டும். இன்றைக்குப் பள்ளித்திலிருந்து நடுமலை உயரத்திற்குச் சாலையமைத்துவிட்டார்கள். பெரிய குன்றுகள் என்று கூறுவதற்கில்லை. ஒவ்வோர் ஊர்ப்புறத்திலும் இருக்கும் குமரக்குன்றுகளைப்போல் இருக்கின்றன. நுழைவுச்சீட்டு பெற்றுக்கொண்டு உதயகிரிக் குன்றுக்குள் நுழைந்தோம். உதயகிரியும் கந்தகிரியும் அடுத்தடுத்து உள்ள குன்றுகள். இவ்விரண்டில் உதயகிரி சற்றே பெரியது. சாலை முகப்பில் இருப்பது. இரண்டு குன்றுகளின் உச்சியிலிருந்தும் ஒவ்வொன்றையும் தெளிவாகப் பார்க்கலாம்.

உதயகிரிக் குன்றில் பதினெட்டுக் குகைகளும் கந்தகிரிக் குன்றில் பதினைந்து குகைகளும் இருக்கின்றன. குகை என்றவுடன் எல்லோராவில் இருப்பதைப்போன்ற நூற்றுக்கணக்கான அடிகளுக்கு நீளும் பெருங்குகைகள் என்று கருதவேண்டா. பாறையின் முகப்பில் ஒன்றோ இரண்டோ அறைகள் உள்ளவாறு குடையப்பட்ட சிறுசிறு குகைகள். பெரும்பாலான குகைகளில் குனிந்து செல்ல வேண்டும். உள்ளே ஓரிருவர் படுத்துத் தூங்கலாம். அறிதுயில் கொள்ளலாம். நம் குடிசைகளில் குனிந்து செல்லுமாறு தலைவாயில் வைப்போமே, அத்தகைய நுழைவாயில்கள் இருக்கின்றன.

புவனேசுவரத்தின் மண்ணும் கல்லும் இரும்புத்தாதுச்சத்து மிக்கவை. அதனால், அங்குள்ள பாறைகள் சிவந்த நிறத்திலோ கரிய நிறத்திலோ இருக்கின்றன. பாறைகளின் மழையூறிய மேற்பகுதி வெய்யிலால் மழையால் இரும்புத்துரு நிறத்தை அடைந்துவிட்டன. உதயகிரி மலையானது பெயருக்கேற்பவே எழுஞாயிற்றின் முதற்கதிர்களைப் பெறுமாறு கிழக்குக்கு முகங்கொடுத்து நிற்கிறது. நல்ல வெய்யிலேறிய காலையில் அங்கே நாம் நின்றுகொண்டிருக்கிறோம். மலை முழுமைக்கும் நன்கு வேலியமைத்துப் பாதுகாக்கிறார்கள். ஆங்காங்கே நீலச்சட்டையணிந்த ஒப்பந்தக் காவல் பணியாளர்களும் மேற்பார்வைக்கு நிற்கின்றார்கள்.

Exploring Odissa Kalingam

சிறிய குன்றமாக இருக்கிறதே என்று எளிதில் நினைத்துவிட்டோம். நன்கு மூச்சு முட்டும்படியான ஏறுமலைதான். நாம் படுகின்ற பாடெல்லாம் ஒரே பொருட்டே இல்லை. ஏனென்றால் நாம் வந்தடைந்திருக்கும் இடம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் குடையப்பட்ட குகைகள் மிகுந்திருக்கும் தொன்மைப் பெருநிலம். இரண்டாயிரத்து இருநூற்றாண்டுகள் பழைமையான பகுதியில் அதன் பான்மை மாறாத குடைவுகளைக் காண்பதற்காக இந்தப் பூவெய்யில் ஏறிய பொழுதில் மூச்சு வாங்கி வியர்த்து நிற்கிறோம். புவனேசுவரத்திற்கு யார் வேண்டுமானாலும் வந்து செல்லலாம், உதயகிரிக் கருங்கற்களில் கால்படுவதற்கு வரலாற்றுப் பேரன்னை முன்னம் குழந்தையாகித் தவழும் குறிக்கோள் வேண்டும்.

Exploring Odissa Kalingam

உதயகிரியானது குமாரி பர்வதத்தொடரில் அமைந்திருப்பதாக பழைய நூல்கள் கூறுகின்றன. அசோகரின் காலத்திற்குப் பிறகு கலிங்கத்தை ஆண்ட பேரரசர் காரவேலன் என்பவர். காரவேலனின் ஆட்சிக் காலத்தில் சமண மதத்துறவிகளைப் போற்றிப் புரக்கும்பொருட்டு அவர்கள் தங்குவதற்கும் இறையுணர்வாழ்க்கை வாழ்வதற்கும் எண்ணற்ற குகைக்குடைவுகள் ஏற்படுத்தப்பட்டன. காரவேலனிலிருந்து தொடங்கிய இத்திருப்பணியை அவர்க்கு அடுத்ததாக வந்த அரசர்களும் தொடர்ந்தனர். பி.எம். பருவாவின் துணிபின்படி உதயகிரி – கந்தகிரிக் குன்றுகளிலேயே நூற்றுப் பதினேழு குகைகள் அமைக்கப்பட்டன என்பது தெரிகிறது. ஆனால், அவற்றில் பல காலத்தால் சிதைந்துவிட்டன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டு வரைக்கும் அவ்விடமானது நூற்றுக்கணக்கான குகைகளால் தனிப்பெரும் மதத்திருநகரமாக விளங்கியிருக்கிறது. நாட்டின் பல்வேறு நிலங்களிலிருந்தும் துறவிகளும் மகான்களும் வந்து சென்றிருக்கின்றனர். இளைப்பாறித் தங்கிப் பேசியிருக்கின்றனர். மன்னரின் தொண்டினை ஏற்றிருக்கின்றனர். இரண்டாம் நூற்றாண்டில் தொடங்கிய அந்த வழமை அடுத்த ஆயிரத்து முந்நூற்றாண்டுகளுக்குத் தொடர்ந்திருக்கிறது. கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டுவரை உதயகிரி – கந்தகிரிக் குகைகள் மதப்பெரியார்களாலும் மக்கள் வருகையாலும் சமணப்பெருந்தலமாக இயங்கின.

– தொடரும்

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47 , 48, 49, 50]

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி