கலாச்சாரம்

கலிங்கம் காண்போம் – பகுதி 51 – பரவசமூட்டும் பயணத்தொடர்


-கவிஞர் மகுடேசுவரன்

உதயகிரிக் குன்றத்தில் ஏறியதும் ஆங்காங்கே சிறு சிறு குகைகள் தென்படுகின்றன. சிறு குடைவுகள் பத்துக்கு எட்டு, எட்டுக்கு ஆறு போன்ற சிற்றளவுகளில் குடையப்பட்டுள்ளன. அங்கிருந்த குகைகளில் பல இயற்கையாகவே தோன்றியவைதாம். அவற்றை மேலும் குடைந்து ஒழுங்குபடுத்தியிருக்கிறார்கள். வேறு சில குகைகளைச் செயற்கையாகவும் குடைந்திருக்கிறார்கள்.

ஏதோ பதினெட்டுக் குகைகள் என்று சொன்னார்களே, எங்கே இருக்கக்கூடும் என்றே தேடிச் செல்ல வேண்டியதில்லை. நாம் செல்லும் வழியில் ஓரத்தில் இருக்கின்ற ஒவ்வொரு சிறு குடைவும் ஒரு குகையாகும். பதினெட்டுக் குகைப்பகுதிகளுக்கும் முன்னே பெயர் தாங்கிய பலகைகளை வைத்திருக்கிறார்கள். வலுக்குன்றிய குகைகளுக்குள் நுழைய முடியாதபடி கம்பிச் சங்கிலிகள் கட்டப்பட்டுள்ளன.

குன்றின்மீது ஏறியதும் நாம் வலப்பக்கமாகச் சென்றோம். அவ்வழியே குன்றின் உச்சிவரை சென்று இடப்புறமாகத் திரும்பி வந்து ஒரு சுற்றை முடித்தால் அனைத்துக் குகைகளையும் பார்த்துவிடலாம். ஏறிச் செல்லும் வழியெங்கும் குகைகள்தாம். தனித்தனிக்குகைகள் சிலவும் இருக்கின்றன. பெரும்பாலும் ஒன்று இரண்டு மூன்று என வரிசைப்பட இருக்கும் குகைகளே மிகுதி.

கீழடுக்கு மேலடுக்கு என்று இரண்டு அடுக்குகள் இருக்கின்றன. மேல் கீழ் அடுக்கு முறைகளில் இரண்டு தளத்துக்கும் இடைப்பட்ட தளம் இரண்டரை அடிக்குத் திடமாக இருக்கின்றது. கீழடுக்குத் தூண் வடிப்பின்மீதே மேலடுக்குத் தூண்கள் வடிக்கப்பட்டிருக்கின்றன. குகை முகப்புகளில் மழைநீர் உள்ளே வடிந்திறங்க முடியாதபடி நெற்றி நீட்டங்களும் உள்ளன. இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முந்திய கல்தச்சர்கள் எத்துணை நுண்மையோடு இயற்கையை வாழிடங்களாக மாற்றி அமைத்தனர் என்பதற்கு இக்குகைகள் அழியாச் சான்றுகள்.

வலப்புறம் ஏறியதும் நமக்கு இடப்புறமாக சிறுசிறு குகைகள் காணப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் அதன் முன்னுள்ள சிற்பங்கள், தூண் அமைப்புகள், குகையின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து பெயர்கள் வழங்கப்படுகின்றன. பதினெட்டுக் குகைகளுக்கும் பதினெட்டுப் பெயர்கள். ஒவ்வொரு குகைப்பெயரும் கும்பா என்று ஈற்றில் முடிகிறது. கும்பா என்றால் வழிபாட்டுக்குரியது, வசிப்பிடம், குகைவாழ்விடம், குகைக்கோவில் என்று பல பொருள்களைச் சொல்கிறார்கள்.

இருக்கின்ற குகைகளிலேயே மிகப்பெரியது ”இராணி கும்பா” எனப்படும் குகைகள்தாம். அவற்றைக் குகைகள் என்பதைவிடவும் குகைவரிசை என்பதே பொருத்தம். வலப்புறமாக ஏறி குன்றின் உச்சிப் பகுதிக்குச் சென்றால் இராணி கும்பாவை அடையலாம்.

இராணி கும்பாவுக்குச் செல்லும் வழியில் உள்ள சிறு குகைகள் பல. எல்லாமே அளவான சிறு வீடுகள். ஜெயவிஜயகும்பா இரண்டு அடுக்குகளை உடையது. கீழடுக்கில் ஒற்றை அறையும் மேலடுக்கில் இரண்டு அறைகளும் உள்ளன. இன்னொரு பகுதியில் கீழடுக்கில் இரண்டும் மேலடுக்கில் மூன்றுமாக உள்ளன. குகை நுழைவுப் பகுதியில் ஒரு தூண் தாங்கலில் ஆண் சிற்பமும் இன்னொன்றில் அழகிய பெண் சிற்பமும் இருக்கின்றன. தூக்கிய நிலையில் இருக்கும் பெண்ணின் கையில் கிளி அமர்ந்திருக்கிறது. பிற சிற்பங்கள் சிதைந்து உருவிழந்துவிட்டன.

குகைக்குள் சென்றமர்ந்து குளிர்ச்சியை உணர்ந்தேன். சில குகைகளுக்குள் பழைமையின் முடைக்காற்று வாசம் அடிக்கும். எல்லோராக் குகைகள் சிலவற்றில் அப்படி இருக்கும். ஆனால், உதயகிரிக் குகைகள் எவற்றிலும் உறுத்தும் வீச்சம் இல்லை. சிறிய வகைக் குகைகள் என்பதாலோ தூய்மை கெடாமல் நன்கு பராமரிப்பதாலோ இருக்கலாம். குகைக்குள் அமர்ந்தபடி வெளிகாட்சிகளைக் காண்கையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய முனிகளும் இவ்வாறுதானே கண்டமர்ந்திருப்பர் என்று தோன்றியது.

– தொடரும்.

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47 , 48, 49, 50,51 ]

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி