கலாச்சாரம்

கலிங்கம் காண்போம் – பகுதி 54 – பரவசமூட்டும் பயணத்தொடர்


-கவிஞர் மகுடேசுவரன்

உதயகிரியின் உச்சிப் பகுதியில் இராணி கும்பாக் குகைகள் இருக்கின்றன. அதற்கும் அப்பால் வடக்காகச் சென்றால் அந்தச் சிறுமலையின் பாறைத்தன்மை நீங்குகிறது. அவ்விடங்களில் சிறிதும் பெரிதுமாய் அடர்ந்த மரங்களே முளைத்திருக்கின்றன. காட்டுக்குப் புதர்த்தன்மை வந்துவிடுகிறது. இராணி கும்பாப் பகுதியிலிருந்து செல்லும் ஒற்றையடிப் பாதை அந்தக் காட்டுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது.

இது போன்ற காப்பிடப்பட்ட பகுதிகளுக்குச் சென்றால் சற்றே விட்டேற்றியாக எல்லாப் பகுதிகளுக்கும் அச்சமின்றி நுழைந்து திரும்புவது எம் வழக்கம். அவ்வாறே ஒற்றையடிப் பாதையைப் பற்றி அந்தக் காட்டுப் பகுதிக்குள் நுழைந்துவிட்டோம். அந்தப் பாதையில் நம்மைப் போன்றே இளஞ்சோடிகள் உள்ளே வருவதும் திரும்புவதுமாக இருந்தனர். காட்டின் உட்பகுதிக்குள் வந்ததும் அந்தப் பாதையில் நின்றிருந்த திருநங்கை ஒருவர் பணம் வாங்கிக்கொண்டிருந்தார். சோடி சோடியாக வந்தவர்களில் சிலர் அவர் கைகளில் பத்து உரூபாய்த் தாள்களைத் திணித்துக்கொண்டிருந்தனர். திருநங்கைக்குப் பிச்சையிடுகிறார்களா என்று பார்த்தால், அப்படியில்லை.

காட்டின் அடர்ந்த புதர்ப்பகுதிக்குள் இருவர் அமர்ந்துகொள்ளவும் படுத்துக்கொள்ளவுமான மறைவுப் பகுதிகள் இருக்கின்றன. தரையில் இலைதழைகளை இட்டு மெத்தைபோல் பரப்பி வைத்திருக்கிறார்கள். உதயகிரிப் பகுதிக்கு வரும் புவனேசுவரத்தின் காதலர்கள் அந்தத் திருநங்கையிடம் பணம் தந்துவிட்டு அவர் காட்டும் ஓர் மறைவுப் பகுதிக்குச் சென்றுவிடுகிறார்கள். உள்ளே செல்கின்றவர்கள் உலகின் பார்வையிலிருந்து விடுபட்டவர்களாய்ப் பேசுவதும் தொட்டு விளையாடுவதும் மடியிலாடுவதுமாய்க் களிக்கின்றார்கள். அவர்களுக்குக் காவலிருப்பது அந்தத் திருநங்கையின் வேலை.

இவ்வளவு பெரிய வரலாற்றுத் தொன்மையிடத்தில் இப்படியொரு பிழைச்செயல் நடைபெறத் தகுமா என்று மனம் சூம்பிவிட்டது எனக்கு. இதற்கு அவ்விடத்தின் காப்பாளர்களும் உடந்தையாக இருத்தல் வேண்டும். இதை நாம் கூற முனைந்தால் “நீங்கள் ஏன் அந்தப் பகுதிகளுக்கெல்லாம் செல்கிறீர்கள் ?” என்ற கேள்வி எழக்கூடும். மறைவிடங்களில் காதலர்கள் அமர்ந்திருக்கிறார்களே தவிர, அக்காட்டுக்குள் செல்லும் ஒற்றையடித் தடத்தில் நாம் மேலும் சென்றால் யாரும் தடுப்பதில்லை. அச்சுறுத்துவதில்லை. திருவிழாக் களத்தின் ஒதுக்குப்புறம்போல் இருக்கிறது.

குன்றின் வடக்குப் பகுதியிலிருந்து பார்த்தாலும் தொலைவிலுள்ள புவனேசுவரத்தின் வளரும் கட்டடங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன. அதற்கும் மேல் அந்தக் காட்டுக்குள் உட்புகுவது உகந்ததன்று என்று திரும்பினோம். இராணி கும்பாவைப் பார்த்தபடி அடுத்த குகைப் பகுதிக்குச் சென்றோம்.

exploring odissa kalingam 54

குகை எண் பத்துக்குக் கணேசக் குகைகள் என்பது பெயர். தனியழகாக இருக்கும் குகைப்பகுதியில் இதுவும் ஒன்று. சிதிலம் மிகுந்திருப்பதால் கணேசக் குகைக்குச் சங்கிலிகளால் தடுப்பு அமைத்திருக்கின்றனர். அதையும் மீறி உள்ளே சென்று படமெடுத்துக்கொண்டிருந்தனர். கற்செதுக்கங்களைக் கையால் தொடாமல் பாங்கினைக் கெடுக்காமல் நாம் படமெடுத்துக்கொள்ள இசைவு தெரிவிக்கின்றனர். இருபுறமும் யானைச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளமையால் கணேசக் குகை என்ற பெயர் வந்திருக்கலாம்.

குகையின் முன்வளாகம் கூடப்பகுதிபோல் இருக்கிறது. அதற்குப் பின்னால் இரண்டு அறைகள் செதுக்கப்பட்டுள்ளன. இரண்டு அறைகளும் சற்றே பெரியவை. அறையின் நிலைக்கதவுச் சுவரில் எண்ணற்ற நுண்சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. வாசல் போன்ற பகுதியில் பச்சைப் புல்வெளி. உதயகிரிக் குகைகளில் காலத்தால் மிகப் பழைமையானவற்றில் இந்தக் கணேசக் குகைகளும் அடக்கம். கிமு முதலாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை என்று கணித்திருக்கிறார்கள். சிதிலம் மிகுதியாக மிகுதியாக அந்தக் குகைகளின் காலம் பழைமையை நோக்கிச் சரிந்திறங்குகிறது என்பதை நாம் விளங்கிக்கொள்கிறோம்.

கணேசக் குகையிலிருந்து வெளியே வந்ததும் உதயகிரிக் குன்றின் தென்மேற்கு உச்சிப் பகுதி தென்படுகிறது. அவ்விடத்தில் மிகப்பெரிய சமணக் கோவில் இருந்திருக்கிறது.

-தொடரும்

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47 , 48, 49, 50,51, 52, 53, 54 ]

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி