கலாச்சாரம்

கலிங்கம் காண்போம் – பகுதி 55 – பரவசமூட்டும் பயணத்தொடர்


– கவிஞர் மகுடேசுவரன்

உச்சிப் பகுதியில் இருக்கும் சமணப் பள்ளி கிமு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மலைமுகட்டைத் தலைப்பாகக் கொண்டு எழுப்பப்பட்ட வட்ட வடிவப் பள்ளி அது. இப்போது அப்பள்ளியின் வடிவம் சிதைந்து பாறையின்மீது பதிக்கப்பட்ட அடித்தளச் செங்கல் வட்டம்தான் மீந்திருக்கிறது. இரண்டாயிரத்து இருநூற்றாண்டுப் பழைய பள்ளியொன்றின் மேல்விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறேன். எதிர்த்திக்கில் கந்தகிரியின் முழுமையான தோற்றத்தைப் பார்க்க முடிந்தது. கந்தகிரியில் செதுக்கப்பட்டிருந்த சிறுகுகைகளும் ஒற்றையடித் தடமும் இங்கிருந்தே நன்றாகத் தெரிந்தன. சமணப் பள்ளியே குன்றின் தலையாய இடமாக இருந்திருப்பதை வைத்துப் பார்க்கையில் அவ்விடம் கோவிலிற் சிறந்த தொல்லிடமேதான்.

நாம் நின்றிருந்த அவ்வழியே தொண்ணூற்றுக்கும் மேற்பட்ட அகவையுடைய மூதாட்டி ஒருவர் விறகுக்கட்டினைத் தலைச்சுமையாய்ச் சுமந்தபடி அந்தப் பாறையின்மீது இயல்பாக ஏறி வந்தார். அவருடைய அகவையை எட்டுமளவுக்கு நாம் இருப்போமா, அப்படியே இருந்தாலும் நிற்கும் திறமாவது நமக்கிருக்குமா ? ஆத்தாவை அண்டி என் அன்பைத் தெரிவிக்கும் முகமாய் நின்றேன். இருவர்க்கும் மொழி தெரியாதே. முகச்சுருக்கங்கள் நூறாய் இருந்தது ஆயிரமாகுமாறு அவரும் சிரித்தார். பணம் கொடுத்தேன். வாங்கிக்கொண்டார். படமும் எடுத்துக்கொண்டேன். இந்தப் பாறையில் பார்த்துப் போக வேண்டும் ஆத்தா என்று எதையோ சொல்ல முயன்றேன். “எனக்கு நீ சொல்கிறாயா…?” என்பதுபோல் சிரித்தபடியே கடந்து சென்றார். அந்தத் தொல்லிடத்தில் தொண்டுக் கிழவியைப் பார்க்க நேர்ந்ததற்கு ஏதோ ஒரு குறிப்பு இருக்க வேண்டும். குறிப்புணரும் ஆற்றல் வாய்த்தவர்களே அதை உரைக்கக் கடவர். நமக்கென்ன தெரியும் ?

உதயகிரிக் குன்றத்தில் இருக்கின்ற பதினெட்டுக் குகைளின் பெயர்கள் இவை : இராணி கும்பா, பஜகர கும்பா, சோட்டா ஹாத்தி கும்பா, அல்காபுரி கும்பா, ஜெயவிஜய கும்பா, பனச கும்பா, தாகுரணி கும்பா, படலபுரி கும்பா, மங்காபுரி சொர்க்கபுரி கும்பா, கணேச கும்பா, ஜம்பேஸ்வர கும்பா, வியாகர கும்பா, சர்ப்ப கும்பா, ஹாத்தி கும்பா, தனகர கும்பா, அரிதாச கும்பா, ஜகந்நாத கும்பா, இராசுய கும்பா. ஒவ்வொரு குகைக்கும் அதைச் செதுக்கி வழங்கியவர், அதில் இருந்தவர், அதன் வடிவத்தன்மை ஆகியவற்றைப் பொறுத்து அப்பெயர்கள் அமைந்திருக்கின்றன.

மலையில் எண்ணற்ற குரங்குகள் இருக்கின்றன. அவற்றின் இயல்புகளைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். உடலெங்கும் வெள்ளை முடிகளும் முகங்களில் அடர்கறுப்புமாய் அக்குரங்குகள் செய்யும் குறும்புகள் ஒன்றிரண்டல்ல. அவ்வகைக் குரங்குகளை ஹம்பியில் அச்சுதராயர் கோவிலின் மேற்குத் தோட்டத்தில் பார்த்திருக்கிறேன். பழம் முதலான உண்கனிகள் எவையேனும் இருந்தால் அவற்றை முதல் வேலையாகப் பறித்துக்கொள்கின்றன. பிற குரங்குகளைப்போல நாம் நெருங்கிச் சென்றால் அவை அஞ்சி விலகி ஓடுவதில்லை. நாம் அருகில் சென்றாலும் அது தன்பாட்டுக்கு இருக்கிறது. “ச்சூய்” என்று விரட்டினாலும் ”என்னாடா… என்னாங்கிறே இப்ப…” என்பதுபோல் ஏறிட்டுப் பார்த்துவிட்டு அசையாமல் நிற்கிறது.

exploring odissa kalingam part- 55

அங்கே சில மரங்களின் கிளைப் பகுதிகள் நம் தலையில் முட்டுமாறு இருக்கின்றன. அவற்றின் நிழலில் அமர்ந்தால் நம் தலைக்கு மேலே செல்லும் கிளைவழியாக ஓடி நம்மைப் பதைபதைக்க வைக்கின்றன. அடர்ந்த நிழலான பகுதியில் பத்திருபது குரங்குகள் கூட்டம் போட்டு அமர்ந்திருந்தன. நாம்தான் விலங்குகளின் அன்பராயிற்றே. பேன் பார்த்துக்கொண்டிருந்த குரங்குக் கூட்டத்தோடு போய் நானும் அமர்ந்துவிட்டேன்.

இந்தக் குரங்குகளின் பின்னோக்கிய நூறாவது தலைமுறைதான் இங்கே உலவிய சமண முனிகளோடு உறவாடிக்கொண்டிருந்தவை. அவர்களையே பார்த்த பின்னர் நம்மைப்போன்ற புது மனிதர்களைப் பற்றி அவற்றுக்கென்ன அக்கறை ? என்னை ஓர் ஆளாகவே கருதாமல் அவை பாட்டுக்குத் தத்தம் செயல்களில் கருத்தாக இருந்தன. அக்குரங்குகள் சோலை மந்திகள் வகையைச் சேர்ந்தவை என்று நினைக்கிறேன். தலைக்கு மேலே செல்லும் ஒரு கிளையின் வழியாகச் சென்ற குரங்குக் குட்டி என் தலையைத் தட்டுவதற்கு முயன்றது. பழிப்பு காட்டியது. “உன்னைப்போல் கட்டற்று வாழ வகையற்றுத்தானே இப்படி ஊர் ஊராகச் சுற்றுகிறேன்…” என்பதுபோல் இரக்கமாகப் பார்த்தேன். அதற்கு என்ன தோன்றிற்றோ… என்னை விட்டு அகன்றது. மூத்த குரங்குகள் என்னையும் ஓர் ஆளாக மதித்து இடையூறு செய்யாமல் இருந்தன. குரங்களுக்கும் எனக்கும் ஓர் உடன்பாட்டு நிலை ஏற்பட்டது. அவற்றுக்கு நடுவே நான் உள்ளவாறு படங்கள் எடுத்துக்கொண்டேன். அவற்றில் ஒரு படம்தான் அண்மையில் வெளிவந்த என் கவிதைத் தொகுப்பான “ஒன்றாய்க் கலந்த உலகு”க்குப் பின்னட்டை ஆனது.

– தொடரும்

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47 , 48, 49, 50,51, 52, 53, 54, 55]

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி