உலக செய்தி

குழந்தைத் தொழிலாளர்களை இன்னும் எத்தனை காலம்தான் கண்டுகொள்ளாமல் இருப்பீர்கள்? #WorldDayAgainstChildLabour

இன்று ஜூன் 12 குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்

ஒருபுறம் குழந்தைகள்தாம் நாளைய இந்தியா என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். மறுபுறம், உலகளவில் அதிகக் குழந்தைத் தொழிலாளர்களைக்கொண்ட நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறோம். 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை, மொத்த இந்தியக் குழந்தைகளின் எண்ணிக்கையில் 5 சதவிகிதம். என்னதான் குழந்தைத் தொழிலாளர்கள் இந்தியாவில் குறைந்துவிட்டார்கள் எனப் பேசிக்கொண்டிருந்தாலும், ஒவ்வொரு நாளும் பேருந்து மற்றும் ரயில் பயணங்கள், சாலையோரங்கள், கடைத் தெருக்கள், கட்டுமானப் பணியிடங்கள், ஹோட்டல்கள் என ஒவ்வோர் இடத்திலும் எத்தனை எத்தனையோ குழந்தைத் தொழிலாளர்களை இயல்பாக கடந்துகொண்டிருக்கிறோம்.

பிள்ளைப் பேறு மட்டுமே செல்வம் என்பதுபோலிருந்த அந்தக் குடும்பத்தினர் ரயிலில் ஏறி, கழிப்பறை பக்கமாக அமர்ந்துகொண்டனர். 5 வயதுக்கும் குறைவாக நான்கு குழந்தைகள். அதில் மூத்த குழந்தையான அவள், ரயில் கிளம்பி 15 நிமிடங்களில் ஒரு வளையத்தோடு வந்து சாகசங்கள் செய்தும், தலைகீழாக நின்றும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துக்கொண்டிருந்தாள். கழிப்பறை அருகில் அமர்ந்திருந்த அந்தத் தாய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் சாகசம் முடிந்ததும், தனது இன்னொரு மகளைத் தட்டோடு அனுப்பினாள். அவர்கள் இருவரும் ரயில் பெட்டி முழுவதும் தட்டோடு வலம்வரத் தொடங்கினர். சிலர், அவர்கள் மீது பரிதாப் பார்வையும் சிலர் ஏளனப் பார்வையும் வீசினர். சிலரோ, அந்தப் பிஞ்சுகளின் மீது வக்கிரப் பார்வையையும் சில்மிஷ செயல்களையும் காட்டத் தவறவில்லை. இப்படித்தான் பெரும்பாலான குழந்தைகள், தங்கள் பெற்றோரின் விருப்பத்தோடும் அனுமதியோடும் கட்டாய குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றப்படுகிறார்கள்.

இப்படி அனுதினமும் நாம் எண்ணிலடங்கா குழந்தைத் தொழிலாளர்களை கடந்துகொண்டிருந்தாலும், இதுகுறித்து வருடத்தில் 50 வழக்குகள்கூட பதியப்படுவதிலை என்கிறது ஓர் ஆய்வு. இது தவிர, எத்தனையோ குழந்தைகள், தங்களின் படிப்பு செலவுகளுக்காக வார விடுமுறையிலும் கோடை விடுமுறைகளிலும் வேலையில் உழன்றுகொண்டுதான் இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஒரு கம்பனியிலோ, கடையிலோ அல்லது கட்டட வேலைகளிலோ குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்ய பணிக்கப்படுகின்றனர். மற்றவர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளத்தைவிட இந்தக் குழந்தைகள் எதிர்பார்க்கும் சம்பளமும் குறைவு, செய்யும் வேலையும் அதிகம் என்பதால், இவர்கள் எதிர்பார்த்தபடி வேலையும் கிடைத்துவிடுகிறது.

இன்னும் சில இடங்களில் இதுபோன்ற குழந்தைகள் மூன்று வேலை உணவுக்காகவே இந்த வேலைகளுக்குப் பெற்றோராலும் உடன் இருப்பவர்களாலும் நிர்பந்திக்கப்படுகின்றனர். பள்ளி இடைநிற்றலும் குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. வறுமையும் குடும்பச் சூழலும், பெற்றோரின் போதிய வருமானமின்மையும் இதை மேலும் ஊக்குவிக்கிறது.

இன்னமும் பல பெற்றோர், தங்கள் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளராக இருப்பது குறித்து எள்ளளவும் தயக்கம் கொள்வதில்லை. காரணம், இந்தக் குழந்தைத் தொழிலாளர் பிரச்னைக்கான வேர், பணம் மட்டுமல்ல. இது அந்தக் குழந்தைகளின் குடும்பப் பின்னணியோடும் தொடர்புகொண்டிருக்கிறது. இதனால்தான் இன்னும் பல சமூகத்தினர், தங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் சில குறிப்பிட்ட வேலைக்குச் செல்வது தங்களுக்கு விதிக்கப்பட்ட ஒன்றாகக் கருதுகிறார்கள். பள்ளிப் படிப்பு என்பது, இத்தகைய குழந்தைகளின் பெற்றோருக்குப் பாரமாக இருப்பதால், இவர்களுக்குக் கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருக்கிறது.

குழந்தை

குறிப்பாக, நகரங்களில் இதுபோன்ற குழந்தைத் தொழிலாளர்களாக இருப்பவர்கள், மலைவாழ் மக்களாக இருந்து நகரத்தை நோக்கி வந்தடைந்தவர்களாகவோ, சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களாகவோ  இருக்கிறார்கள். இவர்கள் இதுபோன்ற தொழிலில் ஈடுபடுவதும் அனுதினமும் நம் கண்முன் விரியும் இயல்பான நடவடிக்கையாக நமக்குப் பழக்கப்பட்டுவிட்டன. இதனால், இதனைச் சமூக வன்முறை என்று உணராமலே கடந்துகொண்டிருக்கிறோம். 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கட்டாய கல்வி கற்க வேண்டும் என்று தெரிந்தும், 14 வயதைக் கடந்து இருப்பினும் ஆபத்து நிறைந்த பணியில் குழந்தைகளை அமர்த்தக் கூடாது என்று தெரிந்தும், எத்தனையோ தீப்பெட்டி தொழிற்சாலைகளிலும் பட்டாசு தொழிற்சாலைகளிலும் இந்தக் குழந்தைகள் கூலி வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். இன்னும் கொடுமையாக, சில குழந்தைகள் என்னவென்றே தெரியாமல் பெற்றோரின் அனுமதியின் பெயரிலோ, அவர்கள் வாங்கிய கடனின் மீதான கட்டாயத்தின் பெயரிலோ பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படும் அவலமும் ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கிறது.

இதற்கெல்லாம் அரசியல் சாசனங்கள் தெளிவான சட்டதிட்டங்களையும் விதிமுறைகளையும் உருவாக்கித் தந்திருப்பினும், எல்லாம் ஏட்டுச் சுரைக்காய் அளவில்தான் இருக்கிறது. இந்தச் சட்டங்கள் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்கி இருப்பினும், அது இந்தச் சமூகம் விரும்பிய முழுமையான மாற்றமாக இல்லை. சமூக மாற்றம் என்பது, சமூக மக்களின் மனமாற்றத்தின் வெளிப்பாட்டின் ஓர் அங்கமே. ஆனால், இங்கு குழந்தைத் தொழிலாளர் குறித்த பெரிதான மனமாற்றமே உண்டாகவில்லை என்கிறபோது, சமூக மாற்றமாக உருவெடுப்பது எந்நாளோ?

இளம்வயதில் குடும்பச் சூழ்நிலையால் பணம் தேடி ஓடும் இவர்கள், சில நேரங்களில் தவறான பாதையில் சென்று தங்கள் வாழ்வைச் சீர்குலைத்துக்கொண்டு சமூக விரோதிகளாகவும் உருப்பெறுகிறார்கள். அவர்களின் மனமும் உடலும் உருக்குலைந்து போகிறது. பொருளாதாரத்தை ஈட்டித்தரும் வாய்ப்புகளாகக் கருதப்படும் இந்தக் குழந்தைகளும் கல்வி கற்க உரிமை உடையவர்களே. அதற்கான முழு அதிகாரத்தையும் இந்திய அரசியல் சாசனம் எழுத்தில் வடிவமைத்துள்ளது. அதைச் செயல்படுத்தவேண்டியது அரசும் அதன் அதிகாரிகளும் மட்டுமல்ல, நாள்தோறும் அவர்களைக் கடந்துசெல்லும் சாமானியர்களான நாமும்தான். 

நாளைய இந்தியாவை வடிவமைக்கப்போகும் குழந்தைகளின் உடலும் மனமும் நம்மால் காக்கப்படவேண்டியது சேவை அல்ல கடமை!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி