இந்தியா

சரிகா இறப்புக்கு ஆம்புலன்ஸ் தாமதம் மட்டும்தான் காரணமா?

அழைத்த அழைப்புக்கு உடனடியாக ஓடி வரவேண்டிய ஆம்புலென்ஸ் 7 மணி நேரம் காலதாமதமாக வந்த காரணத்தால், 14 வயது மாணவியின் உயிர் பரிதாபமாக பிரிந்திருக்கிறது. ஆம்புலன்ஸ் காலதாமதம் மட்டுமே சரிகாவின் உயிரிழப்புக்கு காரணம் என்று சொல்லிவிடமுடியாது. காஞ்சிபுரம் மாவட்டத்துக்குத் தேவையான எண்ணிக்கையில் ஆம்புலன்ஸ்கள் இல்லை என்பதுவும் முக்கியக் காரணம். அதிநவீன மருத்துவ வசதிகள் காஞ்சிபுரத்தில் இல்லை. விடுமுறை தினங்களில் போதிய அளவில் மருத்துவர்கள் இல்லை. ஞாயிற்றுக் கிழமைகளில் ஏற்படும் அதிக அளவிலான விபத்துகள்… இப்படி பல காரணங்கள் இதன் பின்புலத்தில் உள்ளன.

 

காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த நெசவுக் கூலித்தொழிலாளியின் மகளான சரிகா, சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனையில், சிறுநீரகக் கோளாறு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், காஞ்சிபுரம் வந்திருந்த அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சரிகாவின் உடல் நிலை திடீரென மோசமடைந்தது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குச் செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். எனவே, சென்னை செல்வதற்காக 108 ஆம்புலன்ஸ் சேவை எண்ணுக்கு அழைப்புவிடுத்து காத்திருக்க ஆரம்பித்தனர் சரிகாவின் குடும்பத்தினர். பகல் 12 மணியளவிலிருந்து ஆம்புலன்ஸுக்காகக் காத்திருந்தவர்களுக்கு இரவு 7 மணிக்குப் பிறகே ஆம்புலன்ஸ் வசதி கிடைத்திருக்கிறது. உடனே சரிகாவை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு சென்னை சென்றுள்ளனர். ஆனால், நீண்ட காலதாமதமாகிவிட்டதால், தீவிர பாதிப்புக்கு உள்ளான சரிகா,  வழியிலேயே இறந்துபோனார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், திருமால்பூர், திருப்பகுழி, தண்டலம்,  சந்தவேலூர், ராஜகுளம், வாலாஜாபாத், ஐயம்பேட்டை, காஞ்சிபுரம் பேருந்து நிலையம், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை, மாநில நெடுஞ்சாலை, செவிலிமேடு, மாகரல் ஆகிய இடங்களில், ‘108 ஆம்புலன்ஸ்’ வாகனங்கள் உள்ளன. இவ்வளவு வாகனங்கள் காஞ்சிபுரம் பகுதியில் இருந்தும், சரிகாவை உரிய நேரத்தில் சென்னைக்கு அழைத்துச் செல்ல ஒரு ஆம்புலன்ஸ்கூட இல்லை. அதனால்தான், 7 மணிநேர காத்திருப்புக்குப் பிறகு சரிகாவை ஏற்றிவந்த ஆம்புலன்ஸிலேயே சரிகாவின் உயிர் பிரிய நேரிட்டது. 

தமிழகத்திலேயே அதிக அளவில் ‘108 ஆம்புலன்ஸ்’ சேவையைப் பெற்ற மாவட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் திகழ்கிறது. இம்மாவட்டத்தில் மொத்தம் 60  ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளன.

சரிகா காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை ‘108 ஆம்புலன்ஸ் சேவை’யானது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று நகரங்களிலும் தலா 1 வாகனம் என்ற கணக்கில், 3  டூவீலர் ஆம்புலன்ஸ் வாகனங்களும் உபயோகத்தில் உள்ளன.

ஆம்புலன்ஸ் சேவை வேண்டி, இம்மாவட்டத்தில் மட்டும் 2017 ஜனவரி தொடங்கி ஜூன் மாதம் வரையிலான ஆறு மாதங்களில் மொத்தம் 38,648 அழைப்புகள் வந்துள்ளன. இதில் 10,497 அழைப்புகள் சாலை விபத்துக்காக மட்டுமே வந்துள்ளன. பிரசவகால சேவைக்கு 6,922 அழைப்புகளும், இதர அவசர அழைப்புகளாக 21,049 என மொத்தம் 38,648 அழைப்புகள் வந்திருக்கின்றன. தமிழக அளவில் மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் அழைப்புகள் வந்திருக்கின்றன. இவ்வளவு அதிக சேவை பெறக்கூடிய மாவட்டத்துக்குத் தேவையான அளவில், ‘108 ஆம்புலன்ஸ் வாகனங்கள்’ இல்லை. அதுபோல், உரிய நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதில்லை என்ற புகார்களுக்குப் பின்னும் அதிர்ச்சி செய்திகள் ஒளிந்திருக்கின்றன. அதாவது, ”தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வைத்திருப்போர், கொடுக்கும் கமிஷன்களுக்கு ஆசைப்பட்டே 108 ஆம்புலன்ஸ் சேவை வேண்டுமென்றே தாமதிக்கப்படுகிறது” என்ற பரவலானக் குற்றச்சாட்டும் எதிரொலிக்கிறது.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை என தமிழகத்தின் அதிமுக்கியமான மூன்று சாலைகளும் இந்த மாவட்டத்தின் வழியாகத்தான் செல்கின்றன. தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்தச் சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அதிக விபத்துகள் நடக்கும் பகுதியாக இந்த மாவட்டம் இருக்கின்றது.

 

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் மது குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டிச் செல்கிறார்கள். அதிலும் வாரத்தின் முதல் இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த எண்ணிக்கையானது மிகவும் அதிக அளவில் உள்ளது. இதனால், ஞாயிற்றுக் கிழமை மற்றும் விடுமுறை தினங்களில் மிகஅதிக அளவில் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. விபத்துகளை குறைக்க மதுவைக் கட்டுப்படுத்துவதும் அரசின் கடமை.

 

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகளில், விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்படுகிறவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பிவைக்க வேண்டிய சூழலே நிலவிவருகிறது. மாவட்டத் தலைமையிடத்தில் இருக்கும் மருத்துவமனையிலும் ஐசியு வசதி கிடையாது. அதிக மக்கள் வாழும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிநவீன வசதிகள் கொண்ட மருத்துவமனை வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாகக் கிடப்பிலேயே கிடக்கிறது. இதனால் நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு செல்லுமாறு பரிந்துரைக்க வேண்டிய கட்டாயத்திலேயே மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

 

108 சேவை விரைவாக செயல்படுகிறது என்றாலும், சென்னை நகருக்குள் நுழைய முடியாத அளவுக்குப் போக்குவரத்து நெரிசல் உள்ளது. அதனால், எவ்வளவுதான் அவசரம் என்றாலும் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஒரு வாகனம் சென்னை சென்று வர வேண்டுமானால் சுமார் 5 மணிநேரம் ஆகிறது. மாலை  அல்லது இரவு நேரங்களில் 5 மணிநேரத்துக்கும் அதிகமான அளவில் கூடுதல் நேரம் ஆகிறது. இதனால் உயிரிழப்புகள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

108 ஆம்புலென்ஸ்

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் வாகன ஊழியர் சங்கத்தின் சார்பாக பேசியவர்கள், “வாகனம் பழுது என்று தெரிவித்தும் வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு கட்டுப்பாட்டு அறையில் இருந்து பைலட்களை நிர்பந்தித்தார்கள். மேலும் ஏற்கெனவே வாகனமானது சரிவர பராமரிக்கப்படாமல் இருந்ததால், அதிகபட்சமாக 20 கி.மீ வேகத்தில்தான் செல்ல முடியும். செங்கல்பட்டிலிருந்து இந்த வேகத்தில்தான் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். 30 கி.மீ வேகத்தில் சென்றால், வாகனத்தில் தடதடவென சத்தம் வருகிறது. வேகமாக சென்றால், வண்டி எங்கு கவிழும் என்பதும் தெரியாது; உள்ளே இருப்பவர்களையும் காப்பாற்ற முடியாது. இந்த நிலையில்தான் அந்த வண்டி இருந்தது” என்கிறார்கள். 

108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை. இருக்கின்ற வாகனங்களும் நல்ல பராமரிப்பில் இல்லை. நவீனமயமாக்கப்படாத மருத்துவமனைகள், ஊழியர்களின் அலட்சியம், போக்குவரத்து நெரிசல் என சரிகாவின் மரணத்துக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

தமிழகத்திலேயே அதிக அளவில் ‘108 ஆம்புலன்ஸ்’ சேவையைப் பெற்ற மாவட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் திகழ்கிறது. ஆனால், அதே மாவட்டத்தில்தான் உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் ஓர் உயிரும் பிரிய நேர்ந்திருக்கிறது என்ற கொடுமையை என்னவென்று சொல்ல…?

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி