இலங்கை

சிறையில் ஒரு கண்ணீர்ப் பொங்கல்!

எத்தனை காலங்கள் தான்
வலிகளைச் சுமப்பது
எங்களை விட்டு விலகி
வசந்தங்கள் தொலை தூரம்
சென்று விட்ட போது
சோகங்களை எல்லாம்
சுகங்களாக மாற்றிப்
பழகிக் கொண்டோம்.

நாளை என்றொரு நாள்
நமக்கில்லை என்ற போது
இன்றைய பொழுதை
முடிந்த வரை
இன்பமாய்க் கழித்திட
முயற்சி செய்வோம்
பிரிவை எண்ணி
அழுவதை விட
உறவை நினைந்து
மகிழ்ந்திடுவோம்
பொங்கல், புதுவருடம், தீபாவளி என
வந்து போகும் வசந்தங்களை
வரவழைத்து வாழ்த்துச் சொல்லி
மகிழ்ந்திடுவோம்.

நேரில் வாழ்த்துச் சொல்ல
வழியுமில்;லை வசதியுமில்லை
எஸ்.எம்.எஸ்ஸில் பறந்திடும்
வாழ்த்துக்கள் கடல் கடந்தும்
தேசம் தேசமாய்
தை பிறந்தால்
வழி பிறக்குமென்ற
நம்பிக்கை தகர்ந்து போய்
ஆண்டுகள் பல கடந்து போச்சு
தைப் பொங்களை மட்டும்
தாராளமாய்க் கொண்டாடிடுவோம்

இந்து மா மன்றத்தின்
அனுக்கிரகம் பாவப்பட்ட
எங்கள் மேல் பட்டதனால்
கடலை, அவல், பொங்கலென்று
அமர்க்களமாய் அகம் மகிழ்ந்திடுவோம்.
கடலை அவிக்க
அவல் பிரட்ட
பொங்கல் வைக்க
கோலம் போட என
தனித்தனி குழு அமைத்து
குதூகலமாய் நடந்தேறும்
பொங்கல் விழா
குருக்கள் ஐயாவும் கூட இருந்து
நடத்தி முடிப்பார் பூஜைதனையும்!

எல்லாம் முடிந்து
அவரவர் தட்டுக்களில்
பரிமாறப்படும் சர்க்கரைப் பொங்கல்
ஆவலோடு அள்ளி
வாயிலிடும் போது
உப்புக் கரிக்கும் இப்பொங்கலிலே
அடக்கி வைத்த அழுகைகள்
அணை கடக்கும்போது
பாவம் விழிகள் தான் என்ன செய்யும்?
சிங்களத்துச் சிறையிலிருந்து G.வாசு

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி