வரலாறு

சீனப் பெருஞ்சுவரின் நீ…ண்ட வரலாறு!

atravelbook-8977ecbb8cb82d77fb091c7a7f186163உலகப் பேரதிசயங்களில் அதிசயம், சீனப் பெருஞ்சுவர். நிலவில் இருந்து பார்த்தால், மண்ணில் தெரியும், மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரே விஷயம் சீனப்பெருஞ்சுவர் என்று கூறப்படுகிறது.

சீனப் பெருஞ்சுவர் மிக நீளமானது மட்டுமல்ல, மிகவும் பழமையானதும் கூட. அதாவது, இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கட்டப்பட்டது இச்சுவர். ஆனால் இந்தச் சுவர் பயத்தின் காரணமாகவே எழுந்தது.

2500 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய சீன நாட்டுக்கு பரம எதிரிகளாக விளங்கியவர்கள் மங்கோலியர்கள். சீனாவுக்கு வடக்கே இருந்த அண்டை நாடுதான் மங்கோலியா. சக்தி வாய்ந்த குதிரைப்படை வைத்திருந்த மங்கோலியர்கள் அடிக்கடி சீனாவுக்குள் நுழைந்து கையில் கிடைத்ததை எல்லாம் அள்ளிச் சென்றனர்.

அன்றைய சீனா இன்று போல் மிகப்பெரிய, பரந்து விரிந்து பேரரசாகத் திகழவில்லை. ஏராளமான குட்டி மன்னர்கள்தான் ஆட்சி செய்தார்கள். மங்கோலியர்களின் படையெடுப்பை விரும்பாத அவர்கள், தங்களது நாட்டுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் சீனாவின் வடக்கு எல்லையில் சுவர்களை எழுப்பத் தொடங்கினார்கள்.

ஒவ்வொரு அரசரும் தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் சுவர்களை எழுப்பினார்கள். எனவே, தொடர்ச்சியாக இல்லாமல் துண்டு துண்டுப் பகுதிகளாகவே இந்தப் பெருஞ்சுவர் ஆரம்ப காலத்தில் இருந்தது.

இறுக்கப்பட்ட மண் மற்றும் சரளைக்கற்களால் ஆரம்பத்தில் கட்டப்பட்ட இந்த பெருஞ்சுவர் அவ்வளவு வலிமை வாய்ந்ததாக இல்லை. வால், ஈட்டி போன்ற ஆயுதங்களின் தாக்குதல்களை மட்டும் தாக்குப்பிடிக்கக் கூடியதாகவே அந்தச் சுவர்கள் இருந்தன.

கி.மு. 221-ம் ஆண்டில் சீனாவில் இருந்த சின் என்ற குறுநிலப்பகுதியை ஜெங் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். பலசாலியாக வலம் வந்த ஜெங், சின்னச் சின்ன நாடுகளாக சிதறிக் கிடந்த சீனாவின் பல பகுதிகளை ஒன்றிணைத்து அனைத்துப் பகுதிகளுக்கும் தனது நாட்டின் பெயரான சின் என்பதையே சூட்டினான். இவ்வாறு ஒன்றிணைக்கப்பட்ட புதிய அரசு சின் என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்டாலும் நாளடைவில் அந்த பெயர் சீனா என்று அழைக்கப்பட்டது.

அதேநேரம் புதிய அரசை நிறுவிய மன்னன் ஜெங் கையில் அனைத்து அதிகாரங்களும் குவிந்ததால் அவன் தன்னை சீனாவின் முதன் சக்கரவர்த்தியாக அறிவித்தான். அன்று முதல் அவன் சின் ஷி ஹிவாங் என்று அழைக்கப்பட்டான். இவனது ஆட்சிக் காலத்திலும் முக்கிய எதிரிகளான மங்கோலியர்கள் சீனாவின் மீது படையெடுத்தனர். இது மன்னன் சின் ஷி ஹிவாங்குக்குப் பெரும் தலைவலியாக இருந்தது. இதையடுத்து தனது புதிய பேரரசுக்கு உட்பட்ட நாடுகளுக்கு இடையில் இருந்த எல்லைச் சுவர்களை இடிக்க உத்தரவிட்டான். அதே நேரம் தனது ஆட்சிப் பகுதிக்கு உட்பட்ட சீனாவின் வடக்கு எல்லையில் தொடர்ச்சியான மிகப்பெரிய பெருஞ்சுவரை எழுப்பினான். இன்றைய சீனப்பெருஞ்சுவரின் பிரம்மாண்டம் இப்படித்தான் ஆரம்பமானது.

கி.பி. 221-ம் ஆண்டில் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை சுவரைக் கட்டி முடித்தனர். இதற்கு வான் லிகுவாங்கெங் என்று பெயரிட்டனர். கி.பி. 1368 முதல் 1644 வரை ஆட்சி செய்த மிங் வம்ச மன்னர் களின் காலத்தில் 6,400 கிலோ மீட்டர் வரை இந்தப் பெருஞ்சுவர் நீளம் கண்டது.

இதன் நீளத்தை வைத்தே, எத்தனை பேர் எவ்வளவு கடின உழைப்பைக் கொட்டி இந்தப் பெருஞ்சுவரை உருவாக்கியிருப்பார்கள் என்று ஊகிக்க முடியும்.
பல நூற்றாண்டுகள் தாண்டி சீனப்பெருஞ்சுவர் கம்பீரமாக நின்றிருப்பதே இதன் வலிமைக்குச் சான்று!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி