கலாச்சாரம்

"சேர்ந்து வளர்ப்போம் செந்தமிழ்ப் பயிரை".. எடிசன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியின் கோலாகல ஆண்டு விழா


எடிசன், நியூ ஜெர்சி: “சேர்ந்து வளர்ப்போம் செந்தமிழ்ப் பயிரை” என்ற குறிக்கோளுடன் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி அமெரிக்க நியூ ஜெர்சி மாநிலத்தில் எடிசன் நகரில் சிறப்பாக நடைபெற்று வருவது அறிந்ததே. 570 மாணவர்கள், 75 தன்னார்வத் தமிழார்வலர்களுடன் குழுந்தைகளுக்குத் தமிழை பெருமையாகப் புகட்டி வருகிறது

இப்பள்ளியின் எட்டாவது ஆண்டு விழா மே மாதம் 12, 2018 அன்று எடிசன் உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் (Edison High School Auditorium, NJ) வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

காலை 9 மணிக்கு தமிழ்த் தாய் வாழ்த்து மற்றும் அமெரிக்க நாட்டுப் பண்ணுடன் தொடங்கிய பள்ளி ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் இரவு 7:30 மணி வரை தொடர்ந்தன. 600 இருக்கைகள் கொண்ட பெரிய அரங்கமே நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஆசிரியர் வெங்கடேசன் பக்கிரிசாமி விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர்

எடிசன் நகர மேயர் தாமஸ் லங்கி (Mr.Thomas Lankey) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தமிழ்ப் பள்ளி முற்றிலுமாக தன்னார்வலர்களின் தொண்டில் இயங்கி வருகிறதென்று அறிந்து வியந்தார். அவரின் உரையில் பள்ளி மாணவர்களையும், ஆசிரியர்களையும் வெகுவாகப் பாராட்டி இப்பணி மென்மேலும் தொடர ஊக்குவித்தார். அவருக்கு நன்றி தெரிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

தன்னார்வலர்கள்

குழந்தைகளை பாராட்ட சிறப்பு விருந்தினர்களாக விழாவிற்கு வருகை தந்த தமிழ்த் தன்னார்வலர்களை திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி மனதார வரவேற்றது. தமிழ் மொழி கற்கவும், பேசிப் பழகவும் ஊக்கப்படுத்திய முனைவர் மற்றும் மருத்துவர் அருள் வீரப்பன், மருத்துவர் சுந்தரம் பழனிசாமி (நிறுவனர், நியூ செர்சி தமிழ்ச் சங்கம்), கல்யாண் முத்துசாமி (தலைவர், நியூ செர்சி தமிழ்ச் சங்கம்), சசிகுமார் ரங்கநாதன் (வள்ளலார் தமிழ்ப் பள்ளி), மணிகண்டன் மற்றும் ராஜசேகர் (தமிழ் செர்சி பள்ளி), மோகன்தாஸ் சங்கரன் (குருவாயூரப்பன் தமிழ்ப் பள்ளி) ஆகியோரை மலர்க் கொத்து கொடுத்து கௌரவித்தனர்.

மழலைகளின் ஆடல் பாடல்

மழலைகளின் ஆடல் பாடல்

தொடர்ந்து மழலைகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தித்திமி, எங்க ஊரு வண்டி, எங்க மொழி நல்ல மொழி மற்றும் தமிழுக்கும் அமுதென்று பேர் எனும் பாடல்களுக்கு நடனமாடி, ஓடிவிளையாடு பாப்பா போன்ற பாடல்கள் பாடி, ஆத்திச்சூடி, தமிழ் பழமொழிகள் ஒப்புவித்து பார்வையாளர்களைக் கவர்ந்தார்கள். மேடையில் 3, 4 வயது மழலை மொட்டுக்கள் ஒருங்கிணைந்து செய்தது மிக அழகாக இருந்தது.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்

அடுத்து அடிப்படை நிலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. உழவர்களின் இன்றைய நிலை மற்றும் ஜல்லிக்கட்டு, இனா மீனா டிக்கா, பொங்கல், காக்கை இல்லா சீமையிலே போன்ற பாடல்களுக்கும், அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியாரின் பாடலுக்கும் நடனமாடியது காண்போரைக் களிப்புறச் செய்தது. இந்தியாவில் விடுமுறை கழிப்பு பற்றிய சிறு நாடகமொன்றும் அரங்கேறியது.

மாணவர்களின் நிகழ்ச்சிகள்

மாணவர்களின் நிகழ்ச்சிகள்

தொடர்ந்து முதல் நிலை மாணவர்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன‌. சங்க காலத்தில் ஐந்திணைகள் பற்றிய அறிமுகமும் இன்று தமிழ் நாட்டில் நிலங்களின் நிலையும் என்ற வீதி நாடகம் , மரபணு மாற்றப்பட்ட உணவுகள் குறித்த நாடகம், செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற சிறு நாடகம் , கிராமமா ?நகரமா? நகைச்சுவை நாடகம் ஆகியவைகள் நடைபெற்றன. மேலும் பரதநாட்டியம், கரகம் ,கும்மி, குறத்தி குறவன் ஆட்டம், மயிலாட்டம் போன்ற தமிழர் வாழ்வியலை பறைசாற்றும் நடனங்களை சிறப்பாக ஆடினார்கள்

பாரதிராசன் பாடல்

பாரதிராசன் பாடல்

மேலும் சங்கே முழங்கு என்ற எழுச்சிமிக்கப் பாடலைக் காண பாரதிதாசன் அவர்களே நேரில், தன் உருவப்பட வடிவில் வந்திருந்தது சிறப்பு. மாணவர்கள் சங்கோடு நேர்த்தியான ஆடலுடன் தமிழில் முழங்கியது உணர்ச்சிமிக்கதாக இருந்தது. அடுத்து மாணவர்களின் நாடகங்கள் தொடர்ந்தன. தமிழ் இலக்கியங்களில் புதைந்து கிடைக்கும் சிறப்புகளை விளக்கியும், உடல் உறுப்புகள் தானம் பற்றியும் நாடகங்கள் அரங்கேறின. பணம் எங்கே? என்ற துப்பறியும் நாடகம் புதுமையாக இருந்தது.

முதல்வர் சாந்தி தங்கராஜ்

முதல்வர் சாந்தி தங்கராஜ்

தொடர்ந்து வள்ளுவரும் பாரதியும் இன்றைய தமிழ் மொழியின் நிலையை காண வருவது குறித்தும், ஹார்வர்ட் தமிழ் இருக்கை குறித்தும், அன்றிலிருந்து இன்று வரை என்று 1950 லிருந்து 2018 வரை தேர்ந்தெடுத்த திரைப்பட பாடல்கள் மற்றும் காவல் தெய்வ வழிபாடு குறித்த கிராமிய நாட்டிய நடனங்களும் முத்துக்களின் கோர்வையாக இருந்தது எனில் அது மிகையல்ல. பார்வையாளர்களின் கைதட்டலில் அரங்கம் அதிர்ந்தது. பள்ளியின் முதல்வர் சாந்தி தங்கராஜ் மற்றும் துணை முதல்வர் லஷ்மிநாராயணன் ஆகியோர் தன்னார்வ தமிழ் ஆசிரியர்கள் ஒவ்வொருக்கும் மேடையில் சிறப்பு செய்தனர்.

சபாஷ் தொகுப்பாளர்கள்

சபாஷ் தொகுப்பாளர்கள்

காலை முதல் இரவு வரை விழாவினை பிரசன்னா ராவ், குணாசேகரன் செல்லப்பன், நித்யா வேலுசாமி, மகாராஜன் ராஜரெத்தினம், கரோலின் செபஸ்தி, பாலாஜி ஹரிஹரசுந்தரம், கனிமொழி ம.வீ, வெங்கடாச்சலம் ராஜகோபாலன் ஆகியோர் வெகு சிறப்பாக தொகுத்து வழங்கினர். ஆண்டு விழா குறித்த நேரத்திற்குள் நிறைவடைய தொகுப்பாளர்களின் பங்கு அளப்பரியது. நாள் முழுவதும் ஒலி – ஒளி அமைப்புகளை கவனித்து எந்த வித தடங்கல்களும் இன்றி வெகு சிறப்பாக வழங்கிய இளங்கோ சௌந்தர்ராஜன், கார்த்திக் காவேரிசெல்வன், ஜவகர் ஆகியோரின் சீரிய பணி பாராட்டத்தக்கது. பின்மேடை நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சி-வரிசை ஏற்பாடுகளை நாள் முழுதும் கவனித்துக் கொண்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதில் உயர்நிலை பள்ளி மாணவர் சூர்யா செந்திலின் சிறப்பான‌ பணி, வரும் நிகழ்ச்சிகளில் மாணவர்களையும் தன்னார்வல‌ர்களாக‌ அழைக்க தூண்டுகிறது. மதிய மற்றும் இரவு உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன‌. பள்ளி தன்னார்வலர்கள் இதனை சிறப்பாக கவனித்துக்கொண்டனர்.

தாய்த் தமிழ்நாட்டுக்கே அழைத்துச் சென்ற நிகழ்ச்சி

தாய்த் தமிழ்நாட்டுக்கே அழைத்துச் சென்ற நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற‌ பயிற்சியும்-முயற்சியும் எடுத்துக்கொண்ட மாணவர்களும், நடன ஆசிரியர்களும். உறுதுணையாக இருந்த பெற்றோர்களும் மிகுந்த‌ பாராட்டுதலுக்குரியவர்கள். நடன ஆசிரியர் பாலாஜி அவர்கள் பல வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பாகப் பயிற்சி அளித்தார். இறுதியில் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் நிறுவனர்களில் ஒருவரான‌ முத்துசாமி செந்தில்நாதன் அவர்கள் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுபெற்றது. இந்த ஆண்டுவிழா நிகழ்ச்சி, நியூஜெர்சி வாழ் தமிழ்மக்களை தாய்த்தமிழ் நாட்டுக்கே அழைத்து சென்றது என்றால் அது மிகை அல்ல.

வாழ்க தமிழ்!!! வளர்க தமிழ் உணர்வு!!!
www.jerseytamilacademy.org
கட்டுரை பங்களிப்பாளர்கள்: கனிமொழி ம.வீ, குரு ராகவேந்திரன் – தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள்

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி