உலக செய்தி

ஜி7 மாநாடு – ஜஸ்டின் ட்ருடோவிடம் பேட்டைக்காரனாக மாறிய ட்ரம்ப்!

மாநாடுகளும், சர்ச்சைகளும் ட்ரம்புக்கு ஒன்றும் புதிது அல்ல, முக்கியமான சந்திப்புகளின் போது சர்ச்சைகளிலோ, விமர்சனங்களிலோ ட்ரம்ப் சிக்குவது வழக்கமான விஷயமாகவே மாறி வருகிறது. அமெரிக்க அதிபர் வழக்கமாக கைகொடுப்பதில் தொடங்கி அங்குள்ள தலைவர்களுடன் உரையாடுவது வரை எதாவது ஒரு விஷயம் பேசுபொருளாக மாறிவிடும். அப்படிப்பட்ட ஒரு விஷயம் தான் ஜி7 மாநாட்டிலும் அரங்கேறியுள்ளது. கனடா பிரதமர் பேசியது மிகத்தவறான செயல் என்று ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையேயான மோதல் சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஜி7 மாநாட்டின் போது செய்தியாளர் சந்திப்பில் பேசியதுதான் அதிபர் ட்ரம்பின் கோபத்துக்கு காரணமாகியுள்ளது. இந்த சந்திப்பில் ஜஸ்டின் ”அமெரிக்காவின் இரும்பு மற்றும் அலுமினியம் இறக்குமதி மீதான விலை நிர்ணயத்தை கனடாவால் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. இது கனடாவை அவமதிப்பதற்கு சமமானது. இதுகுறித்து வட அமெரிக்க ஒப்பந்தங்களின் போது பேசுவோம். ஜூலை 1ம் தேதி எடுக்கப்படும் சீர்திருத்த மசோதாக்களின் போது அமெரிக்கா நிர்ணயித்துள்ள சமமற்ற விலை நிர்ணயித்துக்கு எதிரான முடிவுகள் எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்புக்கு முன் நடந்த நிகழ்வுகளில் ட்ரம்பும் , ட்ரூடோவும் கலந்து கொண்டு ஒன்றாக கைகொடுத்துக் கொண்டனர். பின்னர் நடந்த நிகழ்வுகளிலும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஆனால் சந்திப்புக்கு பிறகு சில நிகழ்வுகளில் கலந்து கொள்வதாக திட்டமிட்டிருந்த ட்ரம்ப், முன்பாகவே மாநாட்டை விட்டு பாதியில் பயணத்தை முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டார். வட கொரிய அதிபருடனான வரலாற்றுச் சந்திப்புக்காக முன் கூட்டியே சிங்கப்பூர் விரைந்துவிட்டார். சிங்கப்பூருக்கு வந்த ட்ரம்ப் தனது முழு கோபத்தையும் ஜஸ்டின் ட்ரூடோ மீது காட்டியுள்ளார்.

தனது ட்விட்டரில் ஜஸ்டின் ட்ரூடோவை குறிப்பிட்டு இரண்டு ட்வீட்களை செய்துள்ளார். முதல் ட்வீட்டில் ” ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்துகள் போலியானவை, கனடா அமெரிக்க விவசாயிகளிடம் அதிக விலைக்கு பொருள்களை விற்கிறது. இது போன்ற விஷயங்களை ஆதரிக்காதீர்கள் என அமெரிக்க வர்த்தகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்” என்றும் அடுத்த ஒரு நிமிடத்துக்குள் இரண்டாவது ட்வீட்டில் ” ஜஸ்டின் ட்ரூடோ நான் ஜி7 மாநாட்டில் இருந்து கிளம்பிய பிறகு அமெரிக்காவின் செயல்கள் ‘அவமதிப்பதாகவுள்ளது, மரியாதைக்குறைவானது’ என்றும் பேசியது முதுகெலும்பற்றச் செயல்” என்று கூறியுள்ளார்.

ட்ரம்ப் -  ஜஸ்டின்

இது குறித்து பதிலளித்துள்ள ஜஸ்டின் ட்ரூடோவின் செய்தி தொடர்பாளர் ”கனடா பிரதமர் பொது மற்றும் பெர்சனல் பேச்சுவார்த்தைகளின் போது எந்தவித தவறான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை” என்று கூறியுள்ளார். ட்ரம்ப் இந்த சந்திப்புக்கு முன்பே “அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் சுமுகமாக இல்லாத நாடுகளின் உறவுகள் வர்த்தக ரீதியாக துண்டிக்கப்படும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது, 

அமைதியானவர், தமிழக மக்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்தெல்லாம் சொல்லுவார் என்ற அளவுக்கு அமைதியான ஜஸ்டின் ட்ரூடோவையே, ட்ரம்ப் கோபத்துக்கு ஆளாக்கியுள்ளார். ட்ரம்ப் தனது சிங்கப்பூர் பயணத்துக்காகதான் முன்னதாக கிளம்பினார். அதற்கு காரணமாக இந்த சர்ச்சை அமைந்துவிட்டது என்ற கருத்துகளும் எழத்துவங்கியுள்ளன. 

ஆரம்பத்திலிருந்தே ட்ரூடோ விஷயத்தில் முறைத்துக் கொண்டே இருக்கும் ட்ரம்ப், இப்போது நேரடியாகவே தாக்க துவங்கியுள்ளார். ஜூலை1ம் தேதி கனடாவின் முடிவுகளுக்கு அமெரிக்க அளிக்கும் பதில்களை பொறுத்து தான் அமெரிக்க-கனடா உறவுகள் அமையும். ட்ரம்ப்-ட்ரூடோ சர்ச்சையில் வெல்வது யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி