உலக செய்தி

டிரம்ப்-கிம் ஜாங் சந்திப்பு எதிரொலி: சிங்கப்பூரின் விமானங்களுக்குக் கட்டுப்பாட்டு!

Chennai: 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ம் சந்திக்கவிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின்போது, சிங்கப்பூர் வான்பரப்பில் விமானங்கள் பறப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இருபெரும் துருவங்களாகத் திகழும் அமெரிக்காவும், வடகொரியாவும் அணுஆயுதத் திட்டங்களைக் கைவிட்டு, இரு நாடுகளின் தலைவர்களும் சிங்கப்பூரில் வரும் 12-ம் தேதி சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தச் சந்திப்பின்போது, சிங்கப்பூர் வான்பரப்பில் விமானங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே நிலவிவந்த மோதல்கள் முடிவுக்கு வந்து தற்போது சுமுகமான சூழல் உருவாகியுள்ளது. இதனால், கொரிய தீபகற்பத்தில் அமைதி ஏற்பட்டுள்ளது. தென்கொரியா மற்றும் சீனா மேற்கொண்ட முயற்சி காரணமாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் – வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு நடைபெறவுள்ளது. 

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை உலக நாடுகள் மிகுந்த ஆவலுடன் உற்று நோக்கியுள்ளன. அதன்படி, ஜூன் 12-ஆம் தேதியன்று சிங்கப்பூரின் செந்தோசா தீவில் அந்தத் தலைவர்களின் சந்திப்பு நடைபெறவிருக்கிறது. சந்திப்புக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சிங்கப்பூர் அரசு இந்தப் பணிகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், டிரம்ப் – கிம் ஜாங் சந்திப்புக்கு முந்தைய நாளான ஜூன் 11, சந்திப்பு நடைபெறும் 12-ஆம் தேதி மற்றும் அதற்கு அடுத்த நாள் ஜூன் 13 ஆகிய மூன்று தினங்களும் சிங்கப்பூர் வான்பரப்பில் விமானங்கள் பறக்க கடுமையான கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் அரசு விதித்துள்ளது. சாங்கி விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களும், வான்பரப்பில் தங்களது வேகத்தைக் குறைப்பது, விமான ஓடுதளத்தைப் பயன்படுத்துவதில் சில கட்டுப்பாடுகள் என அவை நீளுகின்றன. பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில்கொண்டு இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி