இந்தியா

ட்ரம்ப்- கிம் ஜாங் சந்திப்புக்கு வித்திட்ட இரண்டு தமிழர்கள்!

ந்த சந்திப்பு நடக்குமா… நடக்காதா என உலகமே  ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தது. கடைசி நேரத்தில்கூட சந்திப்பு ரத்து செய்து விடக் கூடும். ஏனென்றால் சந்திக்கவிருந்த மனிதர்கள் இருவருமே அத்தகைய குணம் கொண்டவர்கள். தடாலடியாக அதிரடியாக முடிவு எடுக்கக் கூடியவர்கள். டெனால்டு ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் உன்தான் அந்த இருவரும். எந்த நாட்டில் இவர்களின் சந்திப்பு நடக்க வேண்டும் என்கிற கேள்வி எழுந்தபோது, இரு தலைவர்களுமே தயங்காமல் ‘டிக்’  செய்த நாடு சிங்கப்பூர். ஏனென்றால் இரு நாடுகளுக்குமே சிங்கப்பூர் அன்புக்குரிய நாடு. முக்கியமாக வடகொரிய அதிபரின் நம்பிக்கையை பெற்ற நாடும் கூட. 

அமெரிக்க அதிபரை பொறுத்தவரை, நாடு பிரச்னை இல்லை  வட கொரிய அதிபரோ `தனக்கு பாதுகாப்பான நாடு’  என்பதை உணர்ந்தால் மட்டுமே அந்த நாட்டுக்குள் கால் வைப்பார். இரு தலைவர்களின் சந்திப்புக்காக சிங்கப்பூர் அரசு  ரூ.100 கோடி வரை செலவிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் உலகின் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்படும் நபர். வடகொரிய அதிபருக்கோ சிறு சங்கடம் ஏற்பட்டால் கூட சிங்கப்பூருக்கு அவப் பெயர் ஏற்பட்டு விடும். அதனால், ஒவ்வொரு விஷயத்திலும் சிங்கப்பூர் அரசு மிகுந்த சிரமத்தை எடுத்தது. 5,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். உலகம் முழுவதும் இருந்து 2,500 பத்திரிகையாளர்கள் சிங்கப்பூரில் குவிந்தனர். அவர்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடங்களையும் சிங்கப்பூர் அரசு செய்து கொடுத்தது. 

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்- கிம் ஜாங் சந்திப்பு சிறந்த முறையில் நடக்க முக்கிய காரணமாக இருந்த இருவருமே தமிழர்கள் என்பதில் நாமும் பெருமை கொள்ளலாம். முதலாமானவர் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன். சந்திக்கும் இடம், தேதி முடிவான பின்னரும்கூட  ட்ரம்ப் தன்னிச்சையாக சந்திப்பை ரத்து செய்வதாக அறிவித்தார். அப்போது, வாஷிங்டனுக்கும் பியாங்கியாங்குக்கும் பறந்து இரு தரப்பையும் சமாதானப்படுத்தி சந்திப்பு நிகழ வைத்தவர் விவியன் பாலகிருஷ்ணன். சிங்கப்பூர் மக்கள் கட்சியைச் சேர்ந்த விவியன் ஒரு டாக்டர்.

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம் ட்ரம்ப்- கிம்ஜாங் சந்திப்பு நிகழ காரணமாக இருந்த இரண்டாவது தமிழர். இந்த சந்திப்பை வெற்றிகரமாக நடத்திக் காட்டும் பொறுப்பை  இவரிடம்தான் ஒப்படைத்திருந்தது சிங்கப்பூர் அரசு. தலைவர்களின் பாதுகாப்பு, தங்கும் இடங்கள், சந்திப்பு நிகழும் இடங்களை தீர்மானித்தது இவர்தான். சாங்கி விமான நிலையத்தில் வந்திறங்கிய அமெரிக்க, வடகொரிய அதிபர்களை வரவேற்றதும் இவர்தான். சிங்கப்பூரின் வடகொரிய விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பும் இவரிடம்தான் உள்ளது.

இந்த சந்திப்பு குறித்து சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம் கூறுகையில், `இந்த சந்திப்புக்காக கடுமையாக உழைத்துள்ளோம். இரு நாடுகளுக்கிடையே உள்ள பகைமை தீருமா என்று தெரியவில்லை. ஆனால், நட்பு மலர நாங்கள் காரணமாக இருந்துள்ளோம். இது முதல்படியாக இருக்கும் என்று நம்புவோம்” என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி