இலங்கை

தங்களிற்கும் இடம் கேட்கும் அஸ்மின்,சத்தியலிங்கம் கும்பல்!

வடகிழக்கு மாகாணங்களுக்கான மீள்குடியேற்ற செயலணியில் முதலமைச்சரையும் பிரதம செயலாளரையும் மட்டுமே அரசு உள்ளடக்கியுள்ள நிலையில் தம்மையும் இணைத்துக்கொள்ள வடமாகாணசபை மல்லுக்கட்ட தொடங்கியுள்ளது.
குறித்த செயலணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், முஸ்லிம் காங்கிரஸையும் இணைத்துக் கொள்வதுடன், வடமாகாண சபையையும் இணைத்துக் கொள்ளுமாறு கோரி வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
நேற்று நடைபெற்ற வடமாகாண சபையின் 124வது சபை அமர்வின்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி தீர்மானத்திற்கான விசேட கவனயீர்ப்பு ஒன்றை கொண்டுவந்த மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் கருத்து தெரிவிக்கையில்,  சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கான செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த செயலணியில் தமிழ் மக்களும் உள்ளீர்க்கப்பட்டு அவர்களும் மீள்குடியேற்றப்படவேண்டும் என நாங்கள் கேட்டு வந்தோம். அதனை பேச்சில்  அங்கீகரித்த செயலணி பின்னர் தனியே சிங்கள, முஸ்லிம் மக்களை மட்டும் மீள்குடியேற்றம் செய்து வருகின்றது. 
இந்த நிலையை மாற்றியமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் மேற்படி செயலணியில் இணைத்துக் கொள்ளவேண்டும். அதன் ஊடாகவே தமிழ் மக்களையும் மீள்குடியேற்றுவதற்கான செயலணியாக இந்த செயலணியை  மாற்ற இயலும் என கூறினார். 
தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அரசியல் கட்சிகளை உள்ளீர்ப்பதனால் மேற்படி செயலணி முன்னர் செய்த தவறுகள் எல்லாவற்றையும் சரி என நாங்கள் ஒத்துக்கொள்வதாக அமையும். ஆகவே வடமாகாண சபையை அதற்குள் உள்ளீர்க்க வேண்டும் என தீர்மானம் எடுங்கள் என கூறியிருந்தார். 
இதற்கமைய மேற்படி செயலணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும்,   முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும், வடமாகாண சபையையும் உள்ளீர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனினும் முதலமைச்சர் மற்றும் பிரதம செயலாளரை உள்ளடக்கியிருக்கின்ற நிலையில் வடமாகாணசபை தனித்ததா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி