இந்தியா

தபோல்கர் முதல் கவுரி லங்கேஷ் வரை : ஒரே காவிக் கும்பல் – ஒரே துப்பாக்கி !

ன்னட எழுத்தாளரும், ஆராய்ச்சியாளருமான எம்.எம். கல்புர்கி கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ஆம் நாள் இந்து மத வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட 7.65 மி.மீ. நாட்டு கைத்துப்பாக்கியைக் கொண்டே கடந்த ஆண்டு கன்னட எழுத்தாளர் கவுரி லங்கேஷ்-உம் கொலை செய்யப்பட்டுள்ளார் என கர்நாடக போலீசின் சிறப்புப் புலனாய்வுக் குழு, கடந்த மே 30 அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைதான் இரண்டு கொலைகளுக்கு இடையிலான சம்பந்தத்தை வெளிப்படுத்தும் முதல் அறிக்கையாகும். இரண்டரை ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்ட கல்புர்கியையும் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டெம்பர்-இல் கொல்லப்பட்ட கவுரி லங்கேஷையும் ஒரு பொதுவான குழுவைச் சேர்ந்த கொலைகாரர்கள்தான் கொலை செய்திருக்கின்றனர் என்று போலீசு தரப்பு தெரிவித்திருக்கிறது.

கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் கைப்பற்றப்பட்ட ரவைகள் மற்றும் தோட்டாக்களையும், கல்புர்கி கொல்லப்பட்ட இடத்தில் கைப்பற்றப்பட்டவற்றையும் பரிசோதித்த பூர்வாங்க தடயவியல் சோதனை அறிக்கைகள் இரண்டு கொலையிலும் ஒரே கைத்துப்பாக்கிதான் பயன்படுத்தப்பட்டது என்பதை அம்பலப்படுத்தின. இத்தகவலை இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம் கடந்த செப்-14, 2017 அன்று வெளியிட்டது.

கவுரி லங்கேஷ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட நவீன்குமாரின் மீதான குற்றப் பத்திரிகையில் இணைக்கப்பட்ட தடயவியல் அறிக்கையில், ”இரண்டு கொலைகளிலும் பயன்படுத்தப்பட்ட ரவைகளும் தோட்டாக்களும், 7.65 மி.மீ. குழல்வட்டம் கொண்ட தோட்டாக்களுக்காக செய்யப்பட்ட ஒரே உள்ளூர் கைத்துப்பாக்கியினுடையதுதான்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

லங்கேஷ் படுகொலையைத் தொடர்ந்து அவரது உடலில் துளைத்த 3 ரவைகளையும், அவர் மீது படாமல் குறி தவறிய ஒரு ரவையையும், காலியான 4 தோட்டக்களையும் கைப்பற்றியது போலீசு. அதனை கல்புர்கியின் கொலையில் கைப்பற்றப்பட்ட 2 ரவைகள் மற்றும் அவற்றின் தோட்டாக்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, அதனடிப்படியிலேயே அறிக்கை தயாரித்து சமர்ப்பித்திருக்கிறது போலீசு.

இந்த அறிக்கை மாநில தடயவியல் துறையின் துப்பாக்கி ஆயுதங்கள் பிரிவின் துணை இயக்குனர் கிரண்குமாரால், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைமை விசாரணை அதிகாரி அனுசெத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில், இரண்டு கொலைகளிலும், தோட்டாக் கூடுகளின் மேல் உள்ள, சுடுவிசையின் ”வகை குணாதிசய” குறியீடுகள் மற்றும் ”தனிப்பட்ட குணாதிசய” குறியீடுகளுக்கு இடையிலான ஒப்பீடுகள் ஒன்றோடு ஒன்று ஒத்துப் போகின்றன என்பது குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தோட்டாக்களின் மேலுள்ள தனிப்பட்ட குறியீடுகளின் பரிசீலனையிலிருந்து, அவை ஒரே 7.65 மி.மீ. கைத்துப்பாக்கியிலிருந்து சுடப்பட்டவை என்பதை அந்த அறிக்கை உறுதி செய்கிறது

கைப்பற்றப்பட்ட தோட்டாக்களின் மேலுள்ள நுண்ணிய சிராய்ப்புகள், ஒன்றோடொன்று ஒத்துப் போகின்றன என்பதையும், கல்புர்கி வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட நுண்ணிய சிராய்ப்புகள் குறித்த அறிக்கையோடும் அவை ஒத்துப் போகின்றன என்பதையும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இக்கொலை வழக்கில் இதுவரை சனாதன் சன்ஸ்தா, ஹிந்து ஜன்ஜாக்ருதி சமிதி, ஹிந்து யுவ சேனா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட தபோல்கர், கல்புர்கி, கவுரி லங்கேஷ், பன்சாரே

இதுவரையில் கல்புர்கி கொலை வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை எனபது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 16, அன்று சுட்டுக் கொல்லப்பட்ட கோவிந்த் பன்சாரேவையும் காயத்துடன் தப்பிய அவரது மனைவியையும் சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளில் ஒன்றுதான் கல்புர்கியை கொல்வதற்குப் பயன்படுத்தப்பட்டது என்பது தடயவியல் ஆய்வில் தெரியவந்துள்ளது. கவுரி லங்கேஷ் கொலையிலும் அதே துப்பாக்கிதான் பயன்படுத்தப்பட்டது என்பதற்கான சான்று தற்போது வெளிவந்துள்ளது.

பன்சாரே கொலையில் பயன்படுத்தப்பட்ட இரண்டாவது துப்பாக்கிதான் அதற்கு முன்னர் நரேந்திர தபோல்கரை கொல்ல பயன்படுத்தப்பட்டது என்பதும் தடயவியல் ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முற்போக்காளர்களான நரேந்திர தபோல்கர், பன்சாரே, கல்புர்கி மற்றும் கவுரி லங்கேஷ் ஆகியோரின் கொலைகளில் ஒரே கும்பல்தான் ஈடுபட்டுள்ளது என்பது மிகத் தெளிவாக தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. படுகொலைகளை நிகழ்த்தியது, ஹிந்து ஜன் ஜக்ருதி சமிதியும் அதன் தாய் அமைப்புமான சனாதன் சன்ஸ்தாவும்தான் என்பது கைது செய்யப்பட்ட கிரிமினல்களின் வாக்குமூலங்களில் இருந்து தெரியவந்துள்ளது. ஏற்கனவே நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் சனாதன் சன்ஸ்தாவின் தலைவனான விரேந்திர சிங் தவாடே கைது செய்யப்பட்டதன் மூலம் அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், சனாதன் சன்ஸ்தா கும்பல் இந்தியா முழுவதும் தடையேதுமின்றி சுதந்திரமாக உலா வருகின்றது. ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான காவிக் கும்பல் அரசு இயந்திரத்தின் அதிகாரத்தளங்களை எந்த அளவிற்கு ஆக்கிரமித்துள்ளது என்பதற்கான சான்று இது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி