இந்தியா

`தமிழகத்தில் சிலம்பாட்ட அகாடமி அமைக்க நடவடிக்கை' – அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தகவல்!

`தமிழகத்தில் சிலம்பாட்ட அகாடமி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. எந்த இடத்தில் அமைப்பது என்பது குறித்தும் இந்த பட்ஜெட்டிலேயே அமைப்பதுகுறித்தும் திட்டமிடப்பட்டுவருகிறது’ என இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தெரிவித்துள்ளார். 

 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில், 10-ம் ஆண்டு லட்சுமி அம்மாள் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள், நேற்று இரவு  (17.05.18)  முதல் மே 27-ம் தேதி வரை பகல்-இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற உள்ளது.  11 நாள்கள் நடைபெறும் இந்த அகில இந்திய ஹாக்கிப் போட்டிகளில், பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 அணிகள் பங்கேற்க உள்ளன. இப்போட்டிகள், கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறும். இப்போட்டிகளை  செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் துவக்கிவைத்தனர். 

 பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி,  “இந்தியாவில் விளையாட்டுக் கல்லூரி என்பது தமிழகத்தில்தான் முதன் முதலில் கொண்டுவரப்பட்டது. மற்ற மாநிலங்களில் தற்போதுதான் கொண்டுவரப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுத்தார். தமிழகத்தில் மேலும் விளையாட்டுக் கல்லூரிகள் அமைக்க  நடவடிக்கை எடுக்கப்படும்.  

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பட்டுவருகின்றன. வரும் பட்ஜெட்டில், மீதமுள்ள இடங்களை நிரப்ப  நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. விளையாட்டுத் துறையினருக்கு மின்சார வாரியத்தில் பணியிடங்கள்  வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், சிலம்பாட்ட அகாடமி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. எந்த இடத்தில் அமைப்பது என்பது குறித்தும் இந்த பட்ஜெட்டிலேயே அமைப்பது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

கடந்த ஓர் ஆண்டில், 145 சர்வதேச வீரர்களுக்கு 13 கோடியே 50 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.  சர்வதேச அளவிலான மைதானங்கள் தமிழகத்தில் உள்ளன. ஹாக்கிக்கு 7 மைதானங்கள் உள்ளன. அனைத்தும் செயற்கைப் புல்வெளி மைதானங்கள், விளையாட்டு விடுதி 29, நீச்சல் குளம் 29, ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் 29 உள்ளன. இதுபோல, விளையாட்டுத்துறைக்கு எனப் பல உதவிகள் செய்யவும், ஊக்கமளிக்கவும் அரசு தயாராக உள்ளது” என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி