சினிமா

தானா சேர்ந்த கூட்டம் – திரை விமர்சனம்

சி.பி.ஐ அலுவலகத்தில் கிளார்க்காக வேலை பார்க்கிறார் தம்பி ராமையா. அவரது மகனான சூர்யா, அப்பா பணிபுரியும் அலுவலகத்தில் உயரதிகாரியாக வேண்டும் என்ற கனவோடு, பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறார்.

சிபிஐ தலைமை அதிகாரியாக இருக்கும் சுரேஷ் மேனன், ரெய்டு நடத்திய இடத்தில் லஞ்சம் வாங்குகிறார். இதனை கவனிக்கும் தம்பி ராமையா, சுரேஷ் மேனனைப் பற்றி தலைமை அலுவலகத்துக்கு மொட்டக் கடிதாசி அனுப்புகிறார்.

இதையறிந்த சுரேஷ் மேனன், தம்பி ராமையா மீதான கடுப்பில் சிபிஐ தேர்வில் பங்கேற்கும் சூர்யாவை அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார். திறமை இருந்தும் வேலை கிடைக்காத வருத்தத்தில் சூர்யா மனம் நொந்து போக, மறுபுறத்தில் சூர்யாவின் நண்பனான கலையரசனுக்கும் போலீஸாகும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. பணம் இல்லாத ஒரே காரணத்தால் போலீசாக வேண்டும் என்ற அவரது கனவு கலைந்து விடுகிறது.

இதனால் படித்தும், வேலையில்லாமல் தவிக்கும் கலையரசனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்னை ஏற்படுகிறது. அதனால் தற்கொலை செய்துகொள்கிறார் கலையரசன்.

இதனால் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகும் சூர்யா ஒரு குழுவை அமைக்கிறார். அதில் ரம்யா கிருஷ்ணன், செந்தில், மாஸ்டர் சிவ சங்கர், சத்யன் உள்ளிட்டோர் இருக்கின்றனர். இதற்கிடையே கீர்த்தி சுரேஷ்க்கும், சூர்யாவுக்கும் இடையே காதல் வருகிறது.

தனது குழு மூலம் ஊழல் மற்றம் வருமான வரி செலுத்தாமல் பணத்தை பதிக்கி வைத்திருப்பவர்களை கண்டுபிடித்து, சுரேஷ் மேனன் பெயரை பயன்படுத்தி அவர்களிடம் சிபிஐ அதிகாரியாக நடித்து சோதனை நடத்தி பணத்தை கொள்ளை அடிக்கின்றனர்.

சுரேஷ் மேனன் பெயரை தவறாக பயன்படுத்துபவர்களை கண்டுபிடிக்க ஒரு குழுவை அமைக்கப்படுகிறது. அதற்கு தலைமை ஏற்கிறார் நவரச நாயகன் கார்த்தி.

கடைசியில் சிபிஐ அதிகாரியாக முயற்சி செய்யும் சூர்யா, ஏன் அந்த பணத்தை கொள்ளையடிக்கிறார்? அந்த பணத்தை என்ன செய்தார்? சூர்யா தான் கொள்ளை அடித்தார் என்பதை கார்த்தி கண்டுபிடித்தாரா? கடைசியில் சூர்யா சிபிஐ அதிகாரியானாரா? சூர்யாவின் கூட்டம் வெற்றி பெற்றதா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

சில வருடங்களுக்கு பிறகு அமைதியான, கலகலப்பான சூர்யாவை பார்க்க முடிகிறது. சமீபத்தில் வெளியான அவரது படங்களில் அவரது முழு எனர்ஜியையும் பயன்படுத்தி ஆக்ரோஷமானவராக சூர்யா வந்திருப்பார். ஆனால் இந்த படத்தில் வித்தியாசமான பழைய சூர்யாவை பார்க்க முடிகிறது. குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் வரும் காட்சிகளும் ரசிக்கும்படி இருக்கிறது. கார்த்தி தனது ஸ்டைலில் வந்து அசத்துகிறார்.

முதல் காட்சியில் மிரட்டும் ரம்யா கிருஷ்ணன், அடுத்தடுத்த காட்சிகளில் குடும்ப பெண்ணாக வலம் வந்து படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு திரையில் வரும் செந்தில் ஓரளவுக்கு திருப்திபடுத்தி இருக்கிறார். கலையரசன், நந்தா, சத்யன், ஆனந்த்ராஜ் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். யோகி பாபு காமெடியில் சிரிக்க வைக்கிறார்.

தம்பி ராமையா, சுரேஷ் மேனன், பிரம்மானந்தம் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

திறமை இருந்தும் வேலை கிடைக்காமல் தவிக்கும் இளைஞர்கள், மெரிட்டில் வேலை கிடைத்தும் லஞ்சம் கொடுக்க முடியாமல் தவிக்கும் இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சொல்ல முயற்சித்திருக்கும் விக்னேஷ் சிவனுக்கு பாராட்டுக்கள்.

முதல் பாதியில் திரைக்கதையை மெதுவாக கொண்டு சென்றாலும், இரண்டாவது பாதியில் வேகத்தை கூட்டியிருப்பது படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக சூர்யாவை முற்றிலும் வேறு விதமாக காட்ட முயற்சித்திருப்பது சிறப்பு. அனைத்து கதாபாத்திரங்களிடமும் நல்ல வேலை வாங்கியிருக்கிறார் விக்னேஷ்.

அனிருத்தின் இசையில் பாடல்கள் ஆல்பம் ஹிட்டடித்திருக்கிறது. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் புத்துணர்ச்சி அளிக்கின்றன.

மொத்தத்தில் `தானா சேர்ந்த கூட்டம்’ கொண்டாட்டம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி