கலாச்சாரம்

திருப்பாவை – 14


உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கொயில் சங்டகிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடு ஏல் ஓர் எம்பாவாய்.

விளக்கம்: எல்லோருக்கும் முன்னதாகவே தான் எழுந்திருந்து எங்களை எழுப்புவதாகச் சொல்லிவிட்டு, எல்லோரும் வந்து எழுப்பும்படி படுத்திருக்கும் ஓர் ஆயர் மகளை நங்காய்! நாணாதாய்! என்றெல்லாம் சொல்லி எழுப்புகிறார்கள் தோழியர்கள். எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால், பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே! எழுந்து வாராய்! என்று எழுப்புகிறார்கள்.

திருவெம்பாவை – 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்.

விளக்கம் : காதில் அணிந்த தோடு ஆடும்படியாகவும், உடம்பில் அணியப்பட்ட பொன்னாலாகிய அணிகள் ஆடவும், கூந்தல் மாலை ஆடவும், மாலையைச் சுற்றும் வண்டுக் கூட்டம் சுழலவும், குளிர்ந்த நீருள் மூழ்கி, தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடி, அவன் சென்னியில் சூடப்பெற்றுச் சூழ்ந்துள்ள கொன்றை மாலையையும் பாடி, அவன் ஆதியான முறையையும் பாடி, அந்தமான முறையையும் பாடி, (பிறரில் நின்று நம்மை) வேறுபடுத்திச் சிறப்பாக வளர்த்துக் காத்த வளையல் நிறைந்த கையுடைய உமாதேவியின் திருவடிச் சிறப்பைப் பாடி நீராடுவோமாக!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் – பதிவு இலவசம்!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி