இலங்கை

தொடரும் போராட்டம் – தேங்கிக் கிடக்கும் அஞ்சல்கள்!

ஏழு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் அலுவலகர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தீர்வின்றி காணப்படுவதால் இன்றும் தொடர்வதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இந்தப் பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) வரையிலும் கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றத்தில் சுமார் 3 இலட்சம், ஏனைய பிராந்திய அஞ்சல் நிலையங்களில் சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமான அஞ்சல்களும் தேக்கமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் தாம் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு இன்று தீர்வு கிடைக்கப்பெறும் என ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க சம்மேளனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த போராட்ட விவகாரம் தொடர்பாக அஞ்சல்மா அதிபர் ரோஹண அபேரத்ன குறிப்பிடும் போது, “கடந்த முதலாம் திகதி அஞ்சல் சேவைகள் அமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் போது, இரு வாரங்களுக்குள் தீர்வு என உறுதியளிக்கப்பட்டிருந்தது. எனினும் அந்தக் கால அவகாசம் முற்றுபெறும் முன்னராகவே போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது” எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த போராட்டம் காரணமாக நாடு முழுவதும் அஞ்சல் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்படுவதோடு, குறிப்பாக கிராமப்பகுதி மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி