இந்தியா

தொடர் மழையில் நிரம்பிய குமரி அணைகள்; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் தென்மேற்கு பருவமழை காரணமாக பெருஞ்சாணி அணை உள்பட 4  அணைகளின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழை கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகத் தீவிரமடைந்துள்ளது. இதனால் அணைகளுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 4 நாள்களாக குமரி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை சீரமைப்புப் பணி நடைபெறுவதால் தண்ணீர் முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பேச்சிப்பாறை நீர்மட்டம் இன்று 13 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 1,238 கன அடி தண்ணீர் வருகிறது, 812 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று 71.50 அடியாக உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 1,838 கன அடி தண்ணீர் வருகிறது. இதே அளவு தண்ணீர் வந்தால்  4 நாள்களுக்குள் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது. இதையடுத்து பெருஞ்சாணி அணையை ஒட்டிய கரையோரப் பகுதி மக்களுக்கு இன்று வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 பேச்சிப்பாறை அணை

இதுகுறித்து பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் வேத அருள் சேகர் கூறுகையில், “பருவமழையால் குமரி மாவட்ட அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. அணை முழு கொள்ளளவை எட்டுவதற்கு 6 அடி இருக்கும்போது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுவது வழக்கம். ஏற்கெனவே 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு 1 மற்றும் 2 அணைகள் 12 அடியை எட்டியபோது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேபோல 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை 71 அடியைத் தாண்டியுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணை பகுதியில் உதவி பொறியாளர் தலைமையிலான குழுக்கள் 3 பிரிவுகளாக 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அரை மணி நேரத்துக்கும் ஒரு முறை அணையின் நீர்மட்டம் துல்லியமாகக் கணக்கிடப்பட்டு வருகிறது. 1,800 கன அடிக்கு மேல் பெருஞ்சாணி அணைக்குத் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பெருஞ்சாணி அணை

கனமழை தொடர்ந்தால் அணை திடீரென முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது. எனவே, தற்போது பெருஞ்சாணி அணை கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு எச்சரிக்கையுடன் இருக்குமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணை 13 அடி வரை உயர்ந்துள்ள நிலையில் சீரமைப்புப் பணியால் மேலும் நீர்தேக்குவதற்கான வாய்ப்பு இல்லை. உள்வரத்து தண்ணீரை உபரியாக வெளியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. மாம்பழத்துறையாறு அணையும் முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டியுள்ளது. எனவே, மாம்பழத்துறையாறு அணைக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே போல் மாவட்டம் முழுவதும் உள்ள குளங்களும் நிரம்பி வருவதால் அவற்றையும் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோம்” என்றார். குமரி மாவட்டத்தில் தற்போது பெருஞ்சாணி, சிற்றாறு 1, சிற்றாறு 2, மாம்பழத்துறையாறு ஆகிய 4 அணை கரையோ மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி