இந்தியா

தொடர் மழை.. மண் சரிவு.. துண்டிக்கப்பட்ட சாலைகள்.. முடங்கிய இடுக்கி மாவட்டம்!

தொடர்ந்து ஒருவாரத்துக்கு மேலாகப் பெய்துவரும் தென் மேற்குப் பருவமழையினால், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

போக்குவரத்து துண்டிப்பு: 

தொடர் மழை காரணமாகக் குமுளி வண்டிப்பெரியாறு சாலை கடந்த இரண்டு நாள்களாக முடங்கியுள்ளது. மூணாறு சாலையில் பல இடங்களில் மரம் மற்றும் பாறைகள் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை ஊழியர்கள் ஒருபுறம் துண்டித்து, போக்குவரத்தைச் சீர் செய்துகொண்டிருக்கும்போதே பல இடங்களில் மரங்கள், பாறைகள் சாலைகளில் விழுவதால் போக்குவரத்தைச் சீர் செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டம் மட்டுமல்லாமல், வயநாடு மாவட்டமும் தொடர்மழையால் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளது. இடுக்கி மாவட்டத்தையொட்டிய தமிழகத்தின் எல்லையான தேனி மாவட்டத்தின் குமுளி சாலையும் மழையால் பாதிக்கப்பட்டுச் சாலைகளில் மரங்களும் பாறைகளும் விழுந்தன. இதனால் சில மணி நேரம் இரு மாநிலப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இடுக்கி மழை

பல இடங்களில் நிலச்சரிவு: 

இடுக்கி மாவட்டம் மலைகள் சார்ந்திருப்பதால் பல இடங்களில் சிறியதும் பெரியதுமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மூணாறில் இரண்டு நாள்களுக்குப் முன்னர் லேசான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்றபோதும், கடைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்தன. இதுதவிர, காஞ்சார் − வாகமன் சாலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதனைச் சரி செய்ய மின்சாரத் துறை ஊழியர்களை முடுக்கிவிட்டுள்ளது கேரள அரசு. மாவட்டத்தின் பல இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.

நிலச்சரிவு

பத்துக் கோடி ரூபாய் நஷ்டம் : 

இந்தத் தொடர் மழை காரணமாக இடுக்கி மாவட்டம் மட்டும் 10 கோடி ரூபாய் அளவுக்குச் சேதத்தைச் சந்தித்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல்கட்டமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 12 வீடுகள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாகவும், 196 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் சேத மதிப்பு குறித்து அறிக்கை கேட்டிருக்கிறது வருவாய்த் துறை. சேத மதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இடுக்கி மழை

உயர்ந்தது அணை நீர்மட்டம் : 

தொடர் கனமழையின் காரணமாக இடுக்கி அணை, ஒரே நாளில் நான்கு அடி உயர்ந்துள்ளது. நேற்றைய அணையின் நிலவரம் 2,334 அடி. அதேபோல முல்லைப் பெரியாறு அணையும் வேகமாக உயர்ந்துவருகிறது. 126.70 அடியாகத் தற்போது அணை நிலவரம் உள்ளது. அதேநேரம், வைகை அணையும் உயர்ந்துவருகிறது. 38.85 அடியாக இன்றைய வைகை அணை நிலவரம் உள்ளது. இவை மட்டுமல்லாமல், மஞ்சளாறு அணை, சண்முகா நதி அணை உட்பட தேனி மாவட்டத்தின் அனைத்து அணைகளும் வேகமாகத் தொடர்ந்து உயர்ந்துவருகிறது. 

இடுக்கி மாவட்டம் முழுவதும் 918 ஹெக்டேர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிப்பு, மின்சாரம் துண்டிப்பு, குளிர்காற்று போன்றவற்றால் இடுக்கி மாவட்ட மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இன்று காலை முதல் இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை இல்லை. ஆனால், மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி