கிசு கிசு

நடிப்பால் உயரம் தொட்டவர் – சத்தியராஜ்

சத்தியராஜ்-கவுண்டமணி நடிப்பு- வீடியோ

-கவிஞர் மகுடேசுவரன்

அவர் எந்தக் கதையில் நடித்தாலும் அந்தப் படத்தை விரும்பிப் பார்க்கலாம் என்னும்படியான நடிகர்கள் சிலர் இருக்கின்றார்கள். அவர்களில் தலையாயவர் சத்தியராஜ். அவர் நடித்த படங்கள் பல, எளிமையான கதைகளோடு இருப்பினும் அவற்றை முடிந்தவரை தூக்கி நிறுத்தும் நடிப்பு அவரிடமிருந்து வெளிப்பட்டிருப்பதைக் காணலாம். சத்தியராஜ் நன்றாகவே நடிக்கவில்லை என்று சொல்ல முடியாது. இந்தப் படத்தில் இன்னும் கொஞ்சம் நன்றாக நடித்திருக்கலாம் என்று சொல்லும்படியாக அவர் எங்குமே இடைவெளி விட்டதில்லை. சத்யாராஜ் படமா, வேண்டா என்று எந்தப் பொதுப் பார்வையாளரும் அவர் படங்களைப் புறந்தள்ளமாட்டார்.

கோமல் சுவாமிநாதனின் நாடகமொன்றில் கிடைத்த சிறு வாய்ப்பின் வழியாக, நடிப்புக் களத்திற்கு வந்த சத்தியராஜ் தமக்கான அடையாளத்தைப் பெறுவதற்குப் படாதபாடுகள் பட்டிருக்கிறார். வாய்ப்புகள் தேடியலைந்த காலங்களில் சத்தியராஜின் வழிகாட்டியான சிவக்குமார் புகழ் பெற்றிருந்தார். பிற்பாடு சிவக்குமாரின் சந்தை மதிப்பு குன்றியபோது சத்தியராஜ் புகழ்பெற்ற நாயக நடிகராகிவிட்டார். வாய்ப்புகளைத் தேடியலைந்ததில் சின்ன சின்ன வேடங்களே தொடக்கத்தில் கிடைத்தன. அவருடைய உயரமான தோற்றத்தால் பார்வையாளர்களின் ஈர்ப்பை எளிதில் பெற்றார்.

Sathyaraj, the actor touches peak in career

ஏணிப்படிகள் என்ற திரைப்படத்தில் அவர் தோன்றுவது சில காட்சிகளே என்றாலும் மிரட்டலான கெட்டவனாக உடனடியாக ஏற்கப்பட்டார். கெட்டவனாக நடித்தபோது அவருடைய இடுங்கிய பார்வையும் கீழ்க்கூம்பான முகமும் நன்கு எடுபட்டன. சின்ன சின்ன அடிதடி வேடங்களில் நடித்திருந்தாலும் “இவர்தான் சத்தியராஜூ…” என்று மக்களிடையே பரவலாக அவரை அறிமுகம் செய்த படம் “தங்கைக்கோர் கீதம்.” இன்றுள்ளவர்களுக்கு இச்செய்தி வியப்பாக இருக்கலாம். ஆனால், தங்கைக்கோர் கீதம் வெளியானபோது இருந்த பரபரப்பு வேறு படங்களுக்கு வாய்த்திருக்குமா என்பது ஐயமே. எங்கே திரும்பினாலும் “தங்க நிலவே உன்னை உருக்கி தங்கச்சிக்கு தங்க நகை செஞ்சுடவோ… நட்சத்திரமே உன்னை உடைச்சி விதவிதமா வைர நகை போட்டிடவோ…!” என்ற பாடல்தான் ஒலித்துக்கொண்டிருக்கும். அந்தப் படத்தில்தான் சத்தியராஜுக்கு முதன்மையான கெட்டவன் வேடம். அப்போதுதான் என் தம்பி பிறந்திருந்தான். “தம்பிப் பாப்பாவை ஓர் அண்ணன் எப்படி வளர்த்தணும் தெரியுமா…” என்று அப்படத்தைக் காண்பிக்க என்னை அழைத்துச் சென்றிருந்தார்கள். அப்படத்தில் கெட்டவன் என்றாலும் சத்தியராஜின் நடிப்பு எல்லார்க்கும் பிடித்திருந்தது. இன்றைக்குப் பார்க்கின்ற பொழுது, இராஜேந்தர் நடித்துக் காட்டியதை பல்குரல் கலைஞனின் திறமையோடு சத்தியராஜ் போலச்செய்திருக்கிறார் என்று தெரிகிறது. தன்னைப்போலவே சத்தியராஜை நடிக்கவைத்திருக்கிறார் இராஜேந்தர். அது நன்றாகப் பொருந்திவிட்டது. அதற்குப் பிறகு வந்த எல்லாப் படங்களிலும் சத்தியராஜ் இடம்பெறத் தொடங்கினார்.

மணிவண்ணன் படங்களில் சத்யராஜுக்குப் பொருத்தமான வேடங்கள் அமைந்தன. இருவரும் கோவைப்பகுதியினர். மணிவண்ணனின் ‘அன்பின் முகவரி’ என்ற படத்தில் சத்தியராஜுக்குக் கோவைத்தமிழ் உச்சரிப்புடன் கூடிய நல்ல வேடம் அமைந்தது. கோவைத் தமிழுக்கே உரிய சிறப்புகளில் ஒன்று – அம்மொழியை நகைச்சுவைக்குப் பேசும் அதே முறையில் அச்சமூட்டுதற்கும் பேசலாம். கவுண்டமணி பேசும் கோவைத் தமிழில் நகைச்சுவைதான் முன்னிற்கும். ஆனால், சத்தியராஜ் பேசும் கோவைத் தமிழில் கெடுமனத்தை உணரலாம். இதே சென்னைத் தமிழை எடுத்துக்கொண்டால் மிரட்டிப் பேசுவதுகூட மிரட்டலாக இல்லை, கண்டித்துச் சொல்வதுபோல்தான் இருக்கிறது என்பேன்.

அதன்பிறகு சத்தியராஜைக் கண்டு ஊரே நடுங்கிய படம் ஒன்று வெளியானது. அதற்கும் மணிவண்ணன்தான் இயக்குநர். நூறாவது நாள். கொலை செய்வதும் கொல்லப்பட்ட உடல்களைச் சுவரில் பொருத்தி காரை பூசுவதுமாய்க் காட்டப்பட்ட அந்தப் படத்தைப் பார்த்து அஞ்சாதவர்களே இல்லை எனலாம். அத்தகைய கொலைகளைச் செய்தவனாக ‘ஆட்டோ சங்கர்’ என்பவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தான். இன்றைக்குள்ளதுபோல் அரைமணிக்கொரு இயல்முறி செய்திகள் தோன்றும் காலமில்லை அது. ஆட்டோ சங்கரை வைத்துக்கொண்டு தமிழ்ப் பத்திரிகையுலகம் இரண்டாண்டுகள் காலத்தை ஓட்டின. அந்நிகழ்வுகளை மையப்படுத்தி வெளிவந்திருந்த நூறாவது நாள் திரைப்படத்தில் மொட்டைத்தலையுடன் சத்தியராஜ் தோன்றும் காட்சியில் திடுக்கிட்டு மிரளாதவர்களே இல்லை. மொட்டைத் தலையும் வட்டக்கண்ணாடியுமாய் சத்தியராஜ் காட்டிய தோற்றம் இன்றைய பாகுபலிக் கட்டப்பனுக்கு முன்னோடி. கெட்டவனாக சத்தியராஜ் நடித்தால்தான் அந்தக் குணவார்ப்புக்குப் பொருத்தமாக இருக்கும் என்ற நிலைமை.

தமிழ்த் திரையுலகில் நம்பியார் தொடங்கி வைத்த எதிர்நாயகர் வரிசையில் தமக்கு அளிக்கப்பட்ட வேடங்களில் தொடர்ந்து வெளுத்துக் கட்டியவர் சத்தியராஜ்தான். அதற்கடுத்ததாய் நான் சிவப்பு மனிதன், காக்கிச் சட்டை – இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாயின. நான் சிவப்பு மனிதனில் நாயகனின் தங்கையை வல்லுறவுகொள்ளும் கொடுமையான வேடம். காக்கிச் சட்டையில் விக்கி என்னும் கடத்தல்காரன். சத்தியராஜ் நடித்துக் காண்பித்த அந்த வேடம் ஆங்கிலப் படத்து நடிகர்களின் நடிப்போடு ஒப்பிடத்தக்கது. ‘தகடு தகடு’ என்னும் இரண்டு சொற்களுக்காகவே புகழ்பெற்றார். காக்கிச் சட்டையில் சத்தியராஜுக்கு முகத்தருகு கோணங்கள் நிறையவே வைக்கப்பட்டன. விக்ரம் திரைப்படத்தில் பொய்த்தலைமுடி இல்லாத சுகிர்தராஜா என்னும் ஏவுகணைக் கடத்தல்காரன். மகிழுந்தை விட்டிறங்கி நடந்துவரும்போதே பார்வையாளர்களிடம் ஓர் இறுக்கம் பரவும்.

இதற்கிடையில் மணிவண்ணன் இயக்கத்தில் கலகலப்பான ஓர் எதிர்நாயகனாக ‘முதல் வசந்தம்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். படத்தில் குங்குமப்பொட்டுக் கவுண்டராக சத்தியராஜ் செய்த ‘அக்குறும்புகளுக்கு’ அளவேயில்லை. “சந்தோசமாவும் இருந்துக்கோ… சாக்கிரதையாவும் இருந்துக்கோ…,” என்று காதலை ஏற்றுகொள்கின்ற அடாவடியாளர். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, சிறிய வேடம்தான் என்றாலும் ஒட்டுமொத்தப் படத்தையே தூக்கி நிறுத்துவதுபோல் தோன்றினார். முதல் மரியாதையில் சிறையிலிருந்து பொன்னாத்தாளைப் பார்க்க வரும் மீசைக்காரன். பாரதிராஜாவை ஏதோ ஒரு புள்ளியில் தம் நடிப்பால் கவர்ந்திழுத்தவர் அதன் பிறகுதான் கடலோரக் கவிதைகளின் நாயகனாகவும் மின்னுகிறார். இதற்கிடையே சாவி, சுயரூபம் போன்ற படங்களிலும் அவர் முதன்மை வேடமேற்றர்.

சத்தியராஜுக்குத் தொடக்கத்தில் கிடைத்த மக்கள் அறிமுகம் அவருடைய உயரமான தோற்றத்தால் வந்தது எனலாம். அப்போது உயரமாக யாரிருந்தாலும் “ஆள் நெடுநெடுன்னு சத்தியராஜ் மாதிரி உயரமா இருப்பாருங்க…,” என்றுதான் சொல்வார்கள். தம் தோற்றத்தை மட்டுமே காட்டிக்கொண்டிராமல் நடிப்பிலும், அது சிறிய வேடமானாலும் பெரிய வேடமானாலும்… வந்த வாய்ப்புகளைப் பற்றிக்கொண்டு நெடுநெடுவென்று வளர்ந்து நின்றார். கதாநாயகனாக சத்தியராஜ் நடித்த மறக்க முடியாத படங்களைப் பற்றி இன்னொரு கட்டுரையில் பார்க்கலாம்.

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க subscribe பண்ணுங்க.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி