கலாச்சாரம்

மகுடேசுவரன், பகுதி 17


பூரி என்ற ஊர்ப்பெயர் எப்படி வந்தது என்று ஒருவர் கேட்டிருந்தார். நமக்குப் பூரி என்றதும் உண்பண்டம்தானே நினைவுக்கு வரும் ? நண்பர்கள் சிலரிடமும் கேட்டுப் பார்த்தேன். விடையின்றி அந்தப் பேச்சு மடைமாற்றப்பட்டது. அவ்வூர்ப்பெயரின் வரலாற்றை நோக்கி நகர்வதுதான் விடை காண்பதற்கு நல்வழி. வரலாற்றில் இவ்வூர்க்குப் பல்வேறு பெயர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. சிரிச்சேத்திரம் என்பது அவற்றுள் ஒன்று. பூரி நகர்க்கு வந்த சீனப்பயணி யுவான் சுவாங் இந்நகரின் அப்போதைய பெயராக செலிடலோ என்று குறிப்பிடுகிறார். ‘சாரித’ என்ற பண்டைக்காலப் பெயர் இந்நகர்க்கு இருந்திருக்கிறது. அந்தப் பெயரைத்தான் யுவான் சுவாங் அவ்வாறு குறிப்பிடுகிறார்.

பிறகு இங்கே ஜகந்நாதர் கோவில் கட்டப்பட்ட பிறகு “புருசோத்தம புரி” என்று அழைக்கப்பட்டது. இப்பெயரில் உள்ள புருசோத்தமர் என்பது ஜகந்நாதரைக் குறிப்பது. பிற்பாடு ‘ஜகந்நாத புரி’ என்றும் ஆனது. புரி என்பதற்குத் தலைநகரம் என்பது பொருள். சத்தியமங்கலம் ‘சத்தி’ என்று ஆனதுபோல, சாம்ராஜ்நகரம் ‘நகரம்’ என்று ஆனதுபோல, ஜகந்நாதபுரியானது புரி என்று ஆயிற்று. முன்னொட்டான ஜகந்நாதரை மறந்துவிட்டுப் ‘புரி’ என்று சொல்லத் தொடங்கிவிட்டனர். நாமும் புரி என்பதன் பெயர்க் காரணம் தெரியாமல், ஆங்கிலத்தின் வழியாகப் படித்து அந்நகரைப் ‘பூரி’ என்று சொல்கிறோம்.

சுற்றிலும் மகாநதியின் கிளையாறுகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் மகாநதியில் பெருகிய வெள்ளத்தால் சேர்த்த மணல் திட்டுகள், நகரின் தென்கிழக்கு எல்லையாக உயிர்ச்சூழல் ததும்பும் சிலிக்கா ஏரி, தென்கிழக்கு எல்லையாக நீண்ட மணற்கரை விளிம்புடைய குணகடல், ஆண்டுதோறும் 1336 மிமீ மழையளவு, ஆங்காங்கே வன உயிர்ப்பெருக்கம் மிக்குடைய சதுப்புக் காடுகள் என்று பூரியைச் சுற்றியுள்ள நிலவளங்கள் மலைக்கச் செய்கின்றன. இவற்றுக்கு நடுவே தனிப்பெரும் கோவில் நகரமாகச் செம்மாந்து நிற்கிறது பூரி.

Exploring Odhisha, travel series - 17

இந்து மதப் புனிதத் தலங்களில் ‘சார் தாம்’ (Char dham) என்று நான்கு இடங்களைக் குறிப்பிடுகிறார்கள். அத்தொடரில் உள்ள சார் என்பதன் பொருள் நமக்குத் தெரியும். சார் என்றால் நான்கு. ஒருவரின் வசிப்பிடத்தை ‘ஸ்வதாமம்’ என்று வடமொழியில் வழங்குவர். ஸ்வ என்றால் தனக்குரிய, தனதான. ஸ்வ என்பதைத்தான் சுய என்கிறோம். இதிலுள்ள தாமம் வசிப்பிடத்தைக் குறிக்கும். இறைவன் வசிக்கின்ற முதன்மையான நான்கு இடங்கள் என்னும் பொருளில் ‘சார் தாம்’ என்பார்கள். பத்திரிநாத், துவாரகை, ஜகந்நாதபுரி, இராமேசுவரம் ஆகிய நான்கு இடங்கள்தாம் சார் தாம் ஆகின்றன. அந்நான்கு நகரங்களில் பூரியும் இடம்பெற்றிருப்பதன் வழியாக அந்நகரின் சமயப் பெற்றியை உணரலாம். வேத இதிகாச புராணங்கள் பலவற்றிலும் இந்நகரத்தைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளனவாம்.

Exploring Odhisha, travel series - 17

பூரி நகரக் கோவில் வழிபாட்டில் பௌத்த சமயச் செல்வாக்கும் இருந்ததாக வரலாற்றிஞர்கள் கூறுகின்றனர். பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு முழுமையாக இந்து மத வழிபாட்டுத் தலமாகத் தொடர்கிறது. இக்கோவில் சிலையுருக்களை வைத்துப் பார்க்கையில் தொல்குடி மரபின் கலப்பும் உண்டு என்கிறார்கள். ஒன்பதாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் இங்கு வந்துள்ளார். பன்னிரண்டாம் நூற்றாண்டில் இராமனுஜரின் வருகையும் நிகழ்ந்தது.

கலிங்கர்கள், கிழக்கு கங்கர்கள், இராட்டிரகூடர்கள் என்று தொடர்ந்து பல்வேறு அரசாட்சியினரால் ஆளப்பட்ட பகுதி.

Exploring Odhisha, travel series - 17

கடற்கரையிலிருந்து திரும்பியதும் அறையில் வந்து குளித்துவிட்டுக் கிளம்பினோம். அதிகாலையின் குளிர் உடலைத் தொட்டது. கடற்காற்றின் வெம்மையில் இளவெய்யிலின் முதற்சூட்டில் காலைக் குளிர் அகன்றது. விடுதிப் பகுதியிலிருந்து ஜகந்நாதர் கோவிலுக்கு நடந்தே செல்லலாம்தான். ஆனால், தானிழுனியர்கள் விட்டால்தானே ? ஒரு தானிழுனியாரை அமர்த்திக்கொண்டு கோவிலை நோக்கிச் செல்லலானோம்.

– தொடரும்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் – பதிவு இலவசம்!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி