இலங்கை

மக்களுக்காக திறக்கப்பட்ட வீதியில் விளம்பரம் தேடவிரும்பவில்லை: கௌதமன்

மக்களின் பாவனைக்காகத் திறக்கப்பட்ட வீதியில் விளம்பரம் தேட விரும்பவில்லை என வவுனியா நகரசபை தலைவர் இன்று (செவ்வாய்க்கிழமை) இ. கௌதமன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நீதிமன்றத்திற்கு அருகாமையில் உள்ள வீதி நீண்டகாலத்திற்கு பின்னர் திறக்கப்பட்டமை தொடர்பாக நகரசபை தலைவரை மூத்த சட்டத்தரணி மு. சிற்றம்பலம் விமர்சித்துள்ள நிலையில் அதனை மறுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘வவுனியா நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட சிறைச்சாலை வளாகத்திற்கும் நீதிமன்றத்திற்கும் இடையிலான பாதை வவுனியா நீதிமன்றத்தில் பணிபுரியும் சட்டத்தரணிகளின் வாகனங்கள் தரித்து நிற்பதற்கும் சிறைச்சாலைக்கு நீர்வழங்கும் வாகனம் வந்துசெல்லக்கூடிய விதத்திலும் செப்பனிடப்பட்டுள்ளது.

மேலும் இப்பாதையினூடாக பொதுமக்கள் காய்கறிச் சந்தைக்குச் செல்வதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எமது மக்கள் பேருந்திலிருந்து வவுனியா மருத்துவமனை வாயிலில் இறங்கிய சிறிது தூரத்திலேயே சந்தையை அடைய முடியும்.

மேற்படி பாதை 2000 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் மூடப்பட்டது. அது முதல் சட்டத்தரணிகளும், பொதுமக்களும் சிறைத்துறை உத்தியோகத்தர்களும் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர். இதனைத் திறப்பதற்கு பல்வேறு காலகட்டங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அவை பயனளிக்கவில்லை.

புதிய நகரசபை நிர்வாகம் பொறுப்பேற்பதற்கு முன்னர் வவுனியா நகரசபை செயலாளர் சட்டத்தரணிகளுக்கான வாகனத் தரிப்பிடத்தைத் திறந்து வைத்துள்ளார்.

ஏற்கனவே இருந்த வீதியை புனரமைத்து பயனாளிகளிடம் கையளிப்பதற்கு எத்தகைய விளம்பரமும் தேவையில்லை என்ற அடிப்படையிலேயே அந்தவீதி தற்போது புனரமைக்கப்பட்டு திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சில நாட்களுக்கு முன்னர் எமது மதிப்பிற்குரியவரும் வவுனியா மக்களின் பேரன்பைப் பெற்றவருமான மூத்த சட்டத்தரணியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஐயா சிற்றம்பலம் அவர்களை அவரது வீட்டிற்குச் சென்று நகரசபை தலைவர் என்ற முறையில் சாதக பாதகங்கள் குறித்து விவாதித்திருந்தேன்.

அவரின் ஆலோசனைக்கு அமையவே பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கருத்தாடல் முடிவடைந்த பின்னர் ஐயாவும் என்னை வாசல் வரைவந்து தமிழர் பண்பாட்டிற்கமைய வழியனுப்பிவைத்தார். புழக்கத்தில் இருந்த ஒரு வீதியை மீண்டும் பயனாளிகளிடம் கையளிப்பதற்கு எத்தகைய விளம்பரமும் தேவையில்லை என்னும் அடிப்படையிலேயே நாம் இதனை விளம்பரப்படுத்தவில்லை.

ஐயாவின் எளிமையே எமக்கு இந்த விடயத்தில் கைகொடுத்தது. விளம்பரமின்றி ஐயா வழக்காடியதையும் மக்கள் கொடுப்பதை மனப்பூர்வமாக வாங்கிக்கொள்வதையும் ஐயா சட்டத்தரணியாக கடமையாற்ற ஆரம்பித்த ஐம்பதாவது ஆண்டில் தெரிவித்த கருத்துக்களே எமக்கு உறுதுணையாகவும் உந்துசக்தியாகவும் இருந்தது.

நாம் எமது மக்களுக்காகச் செய்வது என்பது எமது கடமை. அதனைச் செய்வதற்கு விளம்பரமோ புகழோ தேவையில்லை என்று நாம் சிந்தித்ததன் விளைவே எத்தகைய ஆடம்பரமுமின்றி அவ்வீதி திறக்கப்பட்டதாகும். திருத்தப்பணிகளை நீதிமன்ற விடுமுறை நாட்களிலேயே மேற்கொள்ள முடியும் என்ற காரணத்தினாலேயே விடுமுறை நாளில் நாம் அப்பணியை மேற்கொண்டோம்.

வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் அன்ரன் புனிதநாயகம் அவர்களை நேரில் அழைத்துச் சென்று அங்கு நடைபெறும் பணிகளைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொண்டோம். அவரும் தனது திருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

தற்போது அவ்வீதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வீதி வழியே வரையறுக்கப்பட்ட வாகனங்கள் சென்று வரலாம் என்பதுடன் சட்டத்தரணிகள் தமது வாகனங்களை நிறுத்திக்கொள்ளவும் முடியும்.

மேலும் மக்கள் இதனை நடைபாதையாகவும் பயன்படுத்த முடியும். எமது வழிகாட்டி ஐயா சிற்றம்பலம் அவர்கள் எம்மீது அக்கறை கொண்டும் அதிக உரிமை கொண்டும் தெரிவித்த கருத்துக்களை நாம் எமது தந்தையின் சொற்களாகவே கருதி அவரை வணங்குகிறோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி