இந்தியா

ரவுடி கொக்கிகுமாரை சந்தித்த அமைச்சர் மணிகண்டன்! பின்னணி என்ன?

ராமநாதபுரத்தில் போலீஸ் எஸ்.ஐ-யை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரவுடியை அமைச்சர் மணிகண்டன் சந்தித்து ஆறுதல் கூறிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ராமநாதபுரம் எம்.எஸ்.கே நகர் பகுதியைச் சேர்ந்த கொக்கிகுமார் என்ற ராஜ்குமார், பல்வேறு குற்ற வழக்குகளுடைய இவர்மீது கடந்த வாரம் செல்போனை வழிப்பறி செய்த புகார் வந்துள்ளது. இது தொடர்பாகக் கொக்கிகுமாரை ராமநாதபுரம் நகர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் தேடிச் சென்றார். சக்கரை கோட்டை கண்மாய் அருகில் கொக்கிகுமாரும் அவரின் நண்பன் விக்னேஷ்வரனும் மது அருந்திக்கொண்டிருந்ததைக் கண்ட சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் கொக்கிகுமாரைப் பிடிக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷை தாக்கியுள்ளனர். தாக்குதலைச் சமாளிக்க முடியாத சப்-இன்ஸ்பெக்டர், ஓப்பன் மைக்கில் தகவல் கொடுத்தவுடன் போலீஸ் படை சென்று இருவரையும் கைது செய்தது. சப்-இன்ஸ்பெக்டர் தினேஷை கொலை செய்ய முயன்றதாகக் பதியப்பட்ட இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பெறுவதற்கு ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று ராமநாதபுரம் மருத்துவமனைக்குச் சென்ற அமைச்சர் மணிகண்டன், கொலை முயற்சி வழக்கில் கைதாகி சிகிச்சை பெற்று வரும் ரவுடிகள் கொக்கிகுமார், விக்னேஸ்வரன் ஆகிய இருவரையும் சந்தித்து உடல் நலம் விசாரித்துள்ளார். இது தொடர்பான படங்கள் வாட்ஸ் அப்பில் வைரலாகப் பரவி வருகின்றன. சமீபத்தில் வாலாந்தரவை கிராமத்தில் நடந்த இரட்டைக்கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான கார்த்திக் என்பவரின் சகோதரர் தர்மா என்பவரது வீட்டுக்கு கொலை நடந்த ஒரு வாரத்துக்கு முன் அமைச்சர் மணிகண்டன் சென்று பார்த்து வந்ததாகப் புகாரும் எழுந்தது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமைச்சர் மணிகண்டனைத் தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால், அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அவரின் அரசியல் உதவியாளர் சண்முகபாண்டியனைத் தொடர்புகொண்டோம். இதை மறுத்த அவர், ”இது தொடர்பாக ஆதாரம் இருந்தால் அனுப்புங்கள் பின்னர் பதில் சொல்கிறேன்” என்றார். நம்மிடம் இருந்த படத்தை அவருக்கு அனுப்பிய பின்னரும் அவர் பதில் ஏதும் கூறவில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி