இந்தியா

வனப்பகுதியில் ட்ரெக்கிங் செல்ல அனுமதி இல்லை!- நெல்லை கலெக்டர் அறிவிப்பு

”நெல்லை மாவட்ட வனப் பகுதிக்குள் ட்ரெக்கிங் செல்ல யாருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது” என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். அத்துடன், ”வனப்பகுதிக்குள் செல்வதற்கான விதிகள் கடுமையாக்கப்படும்” என்றும் அவர் கூறினார்.

மேற்குத்தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தமிழக எல்லையில், திருக்குறுங்குடி முதல் கடையம் வரையிலான 895 சதுர கி.மீ பரப்பளவில், களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. நாட்டின் 17-வது புலிகள் காப்பகமான இங்கு புலிகள், யானை, மிளா, கரடி, சிறுத்தை, மான் உள்ளிட்ட பல விலங்குகளும் அரிய வகை மூலிகைகளும் உள்ளன. இந்தக் காப்பகத்தின் மூன்று திசைகளிலும் அடர்ந்த வனப்பகுதிகள் சூழ்ந்துள்ள நிலையில், கிழக்குப் பகுதியில் மட்டும் மக்களின் குடியிருப்புகள் உள்ளன.

புலிகள் காப்பக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அணைகள், அருவிகள் உள்ளன. அங்கு, வனத்துறையின் அனுமதிபெற்றுச் செல்ல முடியும். அத்துடன், காட்டுக்குள் தங்குவதற்கு வனத்துறையின் விருந்தினர் மாளிகைகள் உள்ளன. அவற்றிலும் அனுமதிபெற்று தங்கிக் கொள்ளும் வசதி இருந்துவந்தது. ஆனால், குரங்கணி மலையில் ட்ரெக்கிங் சென்றவர்கள், தீயில் கருகி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நெல்லை மாவட்ட வனப்பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியரான சந்தீப் நந்தூரி கூறுகையில், ”குரங்கணி சம்பவத்தைத் தொடர்ந்து, நெல்லை மாவட்ட வனப்பகுதியிகளில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ள பகுதியில் ஏற்கெனவே ட்ரெக்கிங் செல்வதற்கு யாரையும் அனுமதிக்கவில்லை. இனியும் அதே நிலையே தொடரும். யாரும் எந்தச் சூழ்நிலையிலும் ட்ரெக்கிங் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

அத்துடன், சுற்றுலாப்பயணிகள் அணைப் பகுதிக்குச் செல்வதற்கும் அருவிகளுக்குச் செல்வதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். வனத்துறையின் அனுமதியுடன் மட்டும் உள்ளே செல்ல முடியாது. காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் அனுமதி பெற்றால் மட்டுமே காட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மக்களின் நலனுக்காகவும் காடுகளை மேம்படுத்தவும் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளுக்குப் பொதுமக்களும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்’’ எனக் கேட்டுக்கொண்டார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி